Wednesday, January 04, 2012

பந்தாடப்படும் ஆசிரியர் இடமாற்றங்கள்


(நமது செய்தியாளர்) 
தற்போது ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப் படுகின்ற காலகட்டம். கடந்த பல மாதங்களாக பல்வேறு எத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டு புள்ளிகள் இடப்பட்டு வயது, நோய் போன்ற பலதரப்பட்ட விடயங்களை உள்வாங்கிக் கொண்டு இடமாற்றங்கள் கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு அவர்களில் அநேகமானோர் உரிய பாடசாலைகளில் கடமையைப் பொறுப்பேற்ற நிலையில் சில ஆசிரியர்களை அதிபர்கள் சிலர் பந்தாடி வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அண்மையில் அக்கரைப்பற்று கல்வி வலயத்திலுள்ள ஒருசில ஆசரியர்கள் இடமாற்றம் பெற்று பாடசாலைகளுக்கு வலயக்கல்விப் பணிப்பாளரினால் ஒப்பமிடப்பட்ட கடிதத்துடன் சென்றுள்ளனர். ஆனால் அந்த அதிபரோ புதிதாக இடமாற்றலாகி வந்த ஆசிரியரை பதவியேற்க முடியாதவாறு ஒப்பமிடும் புத்தகத்தினை கொடுக்க மறுத்துள்ளார். இந்நிலையில் உரிய ஆசிரியர்கள் வேறு பாடசாலைக்கு திருப்பி அனுப்பட்டதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் துருவத்திற்கு தெரிவித்துள்ளனர்.

என்ன அடிப்படையில் இந்த அதிபர்கள் ஆசிரியர்களை வேண்டாம் என்று கூறுவது மிகமிக கேவலமான செயலாகும் என ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஒரு ஆசிரியர் பாடசாலைக்கு இடமாற்றலாகி வந்தால் அவர் நல்லவரா, சேவை செய்வாரா, அதிபருக்கு விசுவாசமாக இருப்பாரா என்றே இந்த அதிபர்கள் நினைக்கின்றனர் போலும். அரசு பல தடைகளை வைத்து ஆசிரியராக உள்வாங்கியுள்ள நிலையில் சில ஆசிரியர்கள் செய்கின்ற தவறுகள் காரணமாக மற்ற ஆசிரியர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதே நமது வாதமாகும்.

அதேவேளை இன்றைய காலகட்டத்தில் குறிப்பாக கல்முனை கல்வி வலயத்தினை எடுத்துக் கொண்டால் மேலதிக ஆசிரியர்கள் பட்டாளம் நிறைந்துள்ள நிலையில் தெறித்துப் பார்த்து எடுக்கின்ற ஒரு நிலை தோற்றம் பெற்றுள்ளதாகவே எண்ணத் தோன்றுகிறது. அதிகமான ஆசிரியர்கள் தேவைக்கு மேல் ஒரே இடத்தில் குவிந்து உள்ளதும் இதற்கான காரணங்களாகும். ஆசிரியர் நியமனம் வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் பாடசாலைகளில் தேவைக்கு மேலதிகமாக உள்ளதுடன் தேவைக்கேற்ற இடத்திற்கு செல்ல முடியாது அரசியல் வாதிகளின் காலில் விழுந்து இடமாற்றலாகி சொந்த வீட்டுக்கு அண்மையிலுள்ள பாடசாலைகளில் சேவையாற்றுகின்ற ஒருபோக்கும் காணப்படுகின்றது.

ஆசிரியர்கள் என்பவர்கள் கற்றவர்கள், நாகரீகமானவர்கள். மிதமிஞ்சி இருக்கின்றார்கள் என்பதற்காக கேவலமானவர்கள் அல்ல. சில அதிபரக்ள்; தங்களுடைய அதிபர் பதவிகளை எவ்வாறு பெற்றார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். அதேவேளை அரசியல் வாதிகளின் காலில் விழுந்து, தேர்தல் காலத்தில் துண்டுப்பிரசுரம் ஒட்டி, விநியோகித்து, கல்விப் பணிப்பாளர்களின் அன்பைப் பெற்று வந்தவர்கள் இன்றுவரை அதிபர் சேவையைப் பெறாது போராட்டம் நடாத்தியாவது கிடைக்குமா என்று பார்த்தாலும் அதற்கும் அரசு அசையவில்லை. இவ்வாறனவர்கள் ஆசிரியர்களின் மனநிலையையும் புரிந்து செயலாற்ற வேண்டும் என்பதே நமது பிரார்த்தனையாகும். 

0 comments:

Post a Comment