(செங்கதிரான்)
அமெரிக்காவுக்கான இந்தியத் தூதுவருமான நிருபமா ராவின் மகனின் திருமணத்திற்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட பலரும் பெங்களூர் சென்றிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிருபமா ராவின் மகனின் திருமணம் கடந்தவாரம் பெங்களூரில் இருந்து ஒரு மணி நேரப் பயணத் தொலைவில் அமைந்துள்ள தாஜ் விடுதியில் நடைபெற்றது.
இந்தத் திருமண விழாவில் பங்கேற்க இலங்கைப் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, அவரது மனைவி, ஜனாதியின் செயலர் லலித் வீரதுங்க, அவரது மனைவி, பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்ஷ, அவரது கணவர் திருக்குமார் நடேசன், சுகந்தி கதிர்காமர், வர்த்தகர் திலக் சொய்சா, நிருபமா ராவின் சங்கீத ஆசிரியை சுந்தரி டேவிட், அவரது தாய் உள்ளிட்ட பலரும் இலங்கையில் இருந்து சென்றிருந்தனர்.
தானே புயல் காரணமாக விமான நேர அட்டவணைகள் மாற்றியமைக்கப்பட்டதால் இந்தத் திருமணத்துக்குச் சென்ற விருந்தினர்கள் அவசர அவசரமாக நாடு திரும்பினர். அவர்கள் பாதுகாப்பாக கொழும்பு திரும்பியதாகவும் கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தில் அதிகாரியாகவும் பின்னர் இந்தியத் தூதுவராகவும் பணியாற்றிய நிருபமா ராவ், நெருக்கடியான வேளைகளில் இலங்கைக்கு பக்க பலமாக இருந்தவர்.
அரசுடன் நெருக்கமான உறவுகளை பேணிவரும் நிருபமா ராவ், கடந்து ஆண்டு இந்திய வெளிவிவகாரச் செயலர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றபோது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவரை சிறப்பு விருந்துக்காக கொழும்புக்கு அழைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment