Sunday, January 01, 2012

புதுவருட வாழ்த்துக்களும், கடந்துவந்த பாதைகளும், பயணிக்கும் பாதைகளும்


(எஸ்.எல்.மன்சூர்) 
நேற்றைய, நாளை கடந்த வருடம் என்கின்றோம். மனித வாழ்வும் அப்படித்தான். இன்றிருந்தவர் நாளை மரணமடைந்து விட்டால் அவரை பிணம் என்கிறோம். இதுபோலதான் மனித வாழ்வும், இந்த உலக வாழ்வும். நாட்கள் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. நாமும் அதற்கேற்றவாறு மாறிக்கொண்டே போகின்றோம். காலங்கள் மாறும், காட்சிகள் மாறும். ஆனால். மனிதரில் மாற்றம் என்பது இன்னமும் மாறவே இல்லை.

மனித உள்ளங்கள் இன்றைய நாளில் சந்தோசமாக இருந்தாலும் புதுவருடப் பிறப்பு என்பதனால் மக்கள் சந்தோசமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். நாட்டின் முதல் மனிதர் ஜனாதிபதி தொடக்கம் அனைவரும் மற்றவருக்கு வாழ்த்துக்கூறுவதும், புதிய விடயங்களை ஆரம்பிப்பதும் என பலவிடயங்கள் இன்றைய நாளில் நடந்துகொண்டே இருக்கின்றது. அந்தவகையில் நாமும் புதுவருடத்தின் வரவை வாழ்த்தி நிற்பதுடன், கடந்த வருடத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளை பல துக்ககரமான, சந்தோசமான விடயங்களையும் திரும்பிப் பார்ப்பதும், இரைமீட்டுவதும் நல்லதல்லவா?

ஏனெனில் அதனை மீட்டுவதன் ஊடாக இவ்வருடத்தில் நமது பாதையை எவ்வாறு அமைத்துக் கொள்வது, கடந்த வருடத்தில் நமது பாதையில் ஏற்பட்ட தடங்கல்கள், விபரீதங்கள் போன்றவற்றை இவ்வருடத்திலிருந்து ஒரு மாற்றத்தை அல்லது முன்னேற்றத்தை, திருப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பது மனித இயல்பல்லவா. அந்தவகையில் நாமும் 'துருவம்' சார்பாக வாசகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

'துருவம்' இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டு இரு மாதங்கள் சென்றாலும் குறுகியகால எல்லைக்குள் அதன் வளர்ச்சி பற்றி தமிழ்பேசும் மக்களால் மிகவும் ஆர்வத்துடன் பார்க்கப்படுகின்ற ஒரு இணையத்தளமாக தற்போது மாறியுள்ளது. நாள்தோறும் துருவத்தின் வாசகர்கள் அதிகரித்துக்கொண்டு வருவதையிட்டு நாமும் சந்தோசம் அடைகின்றோம். மாற்றங்கள் பொதுவாகவே எதிர்பார்க்கப்படுகின்ற ஒரு சமாச்சாரமாகும். அந்தவகையில் எதிர்காலத்தில் இன்னும் வளர்ச்சிபெற்று மிகப் பெரியதோர் விருட்சமாக வளர்ச்சியடைய ஒவ்வொருவரும் ஒத்துழைப்பு நல்குதல் வேண்டும். இவ்வருடத்தில் இருந்து பல மாற்றங்களையும் நேயர்கள் எதிர்பார்க்கின்றார்கள் அதனையும் 'துருவம்' இணையச் சேவை செய்துகொள்ளும் என்கிற நம்பிக்கையில் நாங்கள் செயற்பட்டு வருகின்றோம்.

அதேவேளை, புதுவருடத்தில் கடந்துவந்த பாதையை சற்று திரும்பிப் பார்த்தால் கடந்த ஜனவரியில் கொழும்பில் கடுமையான குளிர்ச்சி 61 வருடங்களின் பின்னர் காணப்பட்டதாகவும், நாட்டின் கிழக்கு மாகாணம் உட்பட வெள்ளம் ஏற்பட்டதும் நினைவிருக்கலாம். அத்துடன் லங்கா ஈ நியூஸ் தளம் கயவர்களால் தீக்கிரையாக்கப்பட்டதும் இம்மாதத்திலாகும். பெப்பரவரி மாதத்தில் முக்கியமாக கொழும்பு-தூத்துக்குடி போக்குவரத்து சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், 13ஆவது இலங்கை விமானப்படை தளபதியாக எயார் மார்ஷல் ஹர்ச அபேவிக்ரம கடமையேற்றமை முக்கிய இடம்பிடித்திருந்தன.

மார்ச்சில் இடம்பெற்ற 234 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெற்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றமை, உலகைக் குலுக்கிய ஜப்பான் சுனாமியும், அதன்பிற்பாடு ஏற்பட்ட அணு உலை வெடிப்பும் உலகை அச்சத்தில் வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கதாகும். ஏப்ரலில் இறுதியில் பிரிட்டிஷ் இளவரசரான காலம் சென்ற டயானாவின் அருந்தவப் புதல்வர்களில் ஒருவரான வில்லியம் கேட் மிடில்டனை கரம்பிடித்தமை இளைஞர்களை கொள்ளை கொள்ள வைத்திருந்த நிகழ்வாகப் பார்க்கப்பட்டது.

மே மாதத்தில் உலகை உலுக்கிய ஒஸாமா பில்லேடனை அமெரிக்க இராணுவம் திருட்டுத்னமாக வந்து சுட்டுக் கொலை செய்யப்பட்டமை, 30 வருடகால யுத்தவெற்றியின் இரண்டாம் ஆண்டு கொண்டாட்டம், இலங்கையின் முதலாவது பெண் நீதியரசராகவும், 43ஆவது பிரதம நீதியரசராகவும் கலாநிதி ஷிராணி பண்டார நாயக்க சத்தியப்பிரமாணம் செய்து கொண்டது விசேடமாகக் கொள்ளலாம். ஜூலையில் பேராசான் கார்த்திகேசு சிவதம்பி காலமானமை, உதயன் ஆசிரியர் நா.குகநாதன் தாக்கப்பட்டமை இம்மாத்திலாகும்.

ஆகஸ்ட்டில் மர்ம மனிதனான கிறிஸ்மேன் அதிக வலம்வந்த மாதமாகக் கொள்ளலாம். பல இடங்களில் பொலிசார் பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றமை மறக்க முடியாத நிகழ்வாகும். செப்டெம்பரில் ஐ.நா. சபையின் 66ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றியமை. ஒக்டோபரில் உலகை உள்ளங்கைகளில் கொண்டுவந்த அப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜொப்ஸ் காலமானாமை, லிபியாவின் பாலைவனச் சிங்கம் கடாபி கொல்லப்பட்டமை, முல்லேரியா துப்பாக்கி சமரில் முன்னாள் அமைச்சர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர சுடப்பட்டு இறந்தார். பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா படுகாயமடைந்தமை இம்மாத்திலாகும். 

அத்துடன் கொழும்பில் ஏ.ஜே.எம். முஸம்மில் மேயராக தெரிவு செய்யபட்டமை, உலகின் 700 கோடிக் குழந்தைகளில் ஒன்று நமது நாட்டில் 12.01க்கு பிறந்து சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். நவம்பரில் தந்தை செல்வாவின் சிலை திருகோணமலையில் உடைக்கப்பட்டது, வெள்ளைக்கொடி வழக்கில் மீண்டும் சரத் பொன்சேகாவுக்கு 3 வருடம் சிறை, நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு, அதிவேக நெடுஞ்சாலை பாதை திறப்பு என்பன முக்கியமானவைகளாகக் கொள்ளலாம்.

டிசம்பரில் ஐ.தே. கட்சிக்குள் பிளவும், பிரச்சினையும் ஏற்பட்டமை, நாட்டில் பரவலான மழை, தானே சூறாவளி, குளிர்ச்சியான காலநிலை, க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளில் சிக்கல் ஏற்பட்டு மாணவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியமை போன்றவைகள் ஏற்பட்டதும் கடந்த வருடத்திலாகும். அததுடன் இன்னும் பல நாட்டு நிகழ்வுகளும், உலக நிகழ்வுகளும் இடம்பெற்றமை மக்கள் மனதில் நிலையாய் பதிந்திருக்கின்றமை யாவரும் அறிந்தவிடயமே. இது கடந்த வருட நிகழ்வுகளின ஒருசில ஓரங்களைத் தொட்டுக் காட்டியுள்ளேன். 

எதிர்வரும் வருடங்களில் ஒவ்வொருவரும் இலட்சியத்துடன் இருந்து செயலாற்ற முயற்சித்து அதில் வெற்றியடைய வேண்டும். அதில் எமக்கு ஏற்படப்போகின்ற தடைகளைத் துடைந்தெறிந்து இலட்சியத்தில் விடாது முயற்சிக்க வேண்டும். என்று கூறி இவ்வருடம் சிறப்பான பெறுபேற்றை அடைந்திட எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்போம்.

0 comments:

Post a Comment