Sunday, January 08, 2012

அபிவிருத்திகளை தாங்கிக்கொள்ள இயலாதவர்கள் பழி சுமத்துகிறார்கள் - றிசாத்


வன்னி மாவட்டத்தின் அபிவிருத்திளை தாங்கிக்கொள்ள இயலாதவர்கள் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளை தடுத்து நிறுத்துவதிலும், எனக்கு எதிரான அபாண்டங்களை சுமத்துவதிலும் கால நேரத்தை வீணடிக்கின்றார்களே தவிர, வேறு எதையும் அவர்களால் சாதிக்க முடிவதில்லையென தெரிவித்துள்ள வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதீயுதீன் சில்லறைத்தனமான அறிக்கைகளை விடும் சக்திகள் மீண்டும் ஒரு யுத்தத்தை தோற்றுவிக்கலாம் என மனப்பால் குடிக்கின்றனர். அவர்களது மாயாஜால மாயக்கருத்துக்களை வன்னி மாவட்ட மக்கள் நிராகரித்துள்ளார்கள் என்றும் கூறினார்.

இலங்கையின் முதற்தர ஆடை உற்பத்தி நிறுவனமான டைமெக்ஸ் மற்றும் பெர்கஸ் நிறுவனத்தின் ஆடைத் தொழிற்சாலைக்கான அடிக்கல் அமைச்சின் கீழுள்ள மன்னார் கைத்தொழில் பேட்டையில் நட்டி வைக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழை இடம் பெற்றது. நிறுவனத்தின தலைவர் அஷ்ரப் சத்தார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், தொழிலதிபர் எஸ்.கே.பி.அலாவுதீன் உட்பட பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்டனர்.


400 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படும் இத்தொழிற்சாலையில் முதற்கட்டமாக 1200 பேர் நேரடி தொழில் வாய்ப்பை பெறுவதுடன் 5000 பேர் மறைமுகமான நன்மையினை அடைவர், எதிர்வரும் மே மாதம் தெரிவு செய்யப்படும் தொழிலாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். ஆகஸ்ட் மாதம் முதல் இங்கு உற்பத்தி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும்.அதன் மூலம் மன்னார் மாவட்டத்தில் காணப்படும் தொழிற் பிரச்சினைக்கு திர்வு கிடைக்கும் என நம்புவதாக அமைச்சர் றிசாத் பதீயுதீன் இங்கு கூறினார்.

வடமாகாணத்தை பொறுத்தவரையில் எமது மாவட்டம் பாரிய இழப்புக்களை சந்தித்த மாவட்டமாகும். யுத்தம், இயற்கை அழிவு, பொருளாதார ரீதியான பின்னடைவுகள் எமது பின்னடைவுக்கு காரணங்களாகும். அதனை மேம்படுத்தி மக்களது வாழ்வை வளப்படுத்த வேண்டிய தேவை எமக்கிருக்கின்றது. நாம் கைத்தொழல் அமைச்சுப் பதவியினை பொறுப்பெடுத்தபோது எமக்கு வழங்கப்பட்ட பொருளாதார அபிவிருத்தி இலக்கு 2015 ஆம் ஆண்டு வரை 4 பில்லியன்களாக இருக்கவேண்டும். ஆனால் நாம் 2011 ஆம் ஆண்டு முடிவில் 3.2 பில்லியனை ஆடை துறை மூலம் எட்டியுள்ளோம். ஜரோப்பிய ஒன்றியம் எமக்கு ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையினை தற்காலிகமாக இடை நிறுத்திய காலத்தில் 47 சதவீதமான வளர்ச்சியினை இத்துறையில் ஏற்படுத்தினோம். உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு சர்வதேச சந்தையில் முதல்தர உற்பத்தியாக மாறியுள்ளது.


எமது மக்களுக்கு தேவையானது நிம்மதியான வாழ்வும், ஒற்றுமையும் தான், அதனை ஏற்படுத்த நாம் முயற்சிக்கின்ற போது அதனை இனவாதமாக காட்டி அரசியல் பிழைப்பு நடத்தும் வேலைகளை சில தீயசக்திகள் செய்துவருகின்றன. அவர்கள் எதை தான் செய்தாலும் நாம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் ஒருபோதும் கிடப்பில் போடப்படமாட்டாது என்பதை சொல்லிகொள்ள விரும்புகின்றேன். இக்கைத்தொழில் பேட்டை அமைப்பதற்கு எமது அமைச்சின் பெரும் தொகையான நிதியினை செலவு செய்துள்ளது. சுமார் 24 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட மன்னார் கைத்தொழில் பேட்டையில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது முதலாவது தொழிற்சாலையாகும். அதுபோன்று இன்னும் எத்தனையா தொழிற்சாலைகள் வரவுள்ளன.

இப்பேட்டை அமைப்புக்கான நிலத்தை நாம் பெற்றபோது, இத்தீய சக்திகள் தமிழ் மக்களை வெளியேற்றுவதாகவும், காணியினை றிசாத் பதியுதீன் சுவீகர்கின்றார் என்று அறிக்கைவிட்டனர். ஆனால் நடந்தது என்ன என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். தற்போதைய காலத்தை நாம் அதிகமான அபிவிருத்திகளை பெற்றுக்கொள்ளும் காலமாக பயன்படுத்தி கொள்ளவேண்டும்.

அதைவிடுத்து, சாதிக்க முடியாதவற்றை கற்பனையாக கொண்டு கிடைக்கும் அபிவிருத்திகள தடைபடுத்தும் அநியாயத்த்தை செய்ய வேண்டாம். ஒருசிலர் தொடராக எமக்கு எதிரான அபாண்டங்களை சுமத்துகின்றனர்.எமது பேச்சில் சுத்தம் இருக்கின்றது.மக்களது நலனே எமது செயற்பாடாகும், இதை மக்கள் நன்குபுரிந்து கொண்டதன் பயனாகத்தான் எம்மடன் கைகோர்த்து நிற்கின்றனர் என்று கூறிய அமைச்சர் றிசாத் பதியுதீன் தொடர்ந்தும் தமிழ் பேசும் மக்களை காட்டிக் கொடுத்து தமது வாழ்வை அரசியல் பிழைப்பை அமைத்து கொள்ள வேண்டாம் என்றும் கூறினார்.

0 comments:

Post a Comment