
அணு சக்தி எரிபொருள் மற்றும் அணு ஆயுதங்களை தயாரிக்க உதவும் செறிவூட்டிய யுரேனியம் தயாரிக்க புதிய மையத்தை தொடங்கியுள்ளது ஈரான்.
யுரேனியத்தை செறிவூட்டும் புதிய மையம் தரைக்கடியில் யாருக்கும் தெரியாத இடத்தில் செயல்படுகிறது. எனவே வெளிநாடுகள் தாக்கக்ககூடும் என்கிற ஆபத்து வராது என கருதப்படுகிறது.
ஈரானின் புனித நகரான கோம் என்ற இடத்துக்கு அருகே இராணுவ வளாகம் அமைந்துள்ள பகுதியான போர்டோ என்ற இடத்தில் இந்த புதிய மையம் செயல்படுகிறது.
ஈரான் அணு சக்தி துறையின் தலைவர் பெரைதூன் அபாசி, போர்டோவில் யுரேனியம் செறிவூட்டல் பணி விரைவில் தொடங்கும் என சனிக்கிழமை தெரிவித்தார்.
ஈரானிடம் ஏற்கெனவே நடான்ஸ் என்ற இடத்தில் யுரேனியம் செறிவூட்டல் மையம் உள்ளது. இது மிகப் பெரிய மையமாகும். ஆனால் போர்டோ பகுதியில் அமைந்துள்ள மையம் புதிய தொழில்நுட்பத்தில் இயங்குகிறது என்பதோடு அல்லாமல் வெளிநாடுகள் எளிதாக தாக்கிவிடமுடியாத ஒரு இடமாகும்.
போர்டோ மையம் ரகசியமாக பல காலமாக இயங்கிவந்த நிலையில் 2009ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மேலைநாடுகள் இதுபற்றி தெரிந்து கொண்டு அம்பலப்படுத்தின. அதைத் தொடர்ந்தே ஈரான் இந்த மையம் செயல்படுவது பற்றி ஒப்புக்கொண்டது.
அணு ஆயுதங்கள் தயாரிக்கவும், அணுசக்திக்கான எரிபொருளாகவும் பயன்படக்கூடியது செறிவூட்டிய யுரேனியம். எனவே மேலை நாடுகள் இதுபற்றி எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், மருத்துவத் தேவைக்காகவும், அணு மின்சக்தி தயாரிக்கவுமே செறிவூட்டிய யுரேனியத்தை தயாரிப்பதாக ஈரான் கூறிவருகிறது.
0 comments:
Post a Comment