
திபெத் மீதான சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து இரு புத்த துறவிகள் தீக்குளித்தனர். இவர்களில் ஒருவர் பலியானார், மற்றொருவர் தீக்காயங்களுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். திபெத் மீதான சீனாவின் ஆக்கிரமிப்பைக் கண்டித்து 11 புத்த மதத் துறவிகள் தீக்குளித்துள்ளனர். இவர்களில் எத்தனை பேர் பலியாகினர், எத்தனை பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பது தெரியவில்லை.
இந்த அனைத்து தீக்குளிப்புகளும், சீனாவின் மத்திய பகுதியில் திபெத்தை ஒட்டி அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தில் தான் நிகழ்ந்தன. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் அதே சிச்சுவான் மாகாணத்தில் அபா பகுதியில் நடுச் சாலையில் 22 வயதுடைய புத்த மதத் துறவி ஒருவர் தீக்குளித்தார். உடனடியாக காவல்துறையினர் விரைந்து அவரை சிகிச்சைக்குச் சேர்த்தனர்.
அதே பகுதியில் ஓட்டல் ஒன்றில் 18 வயதுடைய மற்றொரு துறவியும் தீக்குளித்து மரணம் அடைந்தார். விசாரணையில் இருவரும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் தீக்குளிப்பது என முடிவு செய்திருந்தது தெரியவந்ததாக ஷின்ஹூவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவர்கள் இருவரும் அருகில் உள்ள கீர்த்தி புத்த மடாலயத்தைச் சேர்ந்த முன்னாள் துறவிகள். சிச்சுவான் மாகாணத்தில் கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் இத்தீக்குளிப்பு படலம் தொடர்ந்து நடந்து வருகிறது. தலாய்லாமா தான் இதைத் தூண்டி விடுகிறார் என சீனா குற்றம்சாட்டி வருகிறது.
ஆனால் புத்த மதத் துறவிகள் மத்தியில் சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்தும், தலாய்லாமாவின் வருகையைக் கோரியும், இத்தகைய தீக்குளிப்புகள் மிகத் தீவிரமாக நடந்து வருகின்றன.
ஆனால் இத்தீக்குளிப்பு சம்பவங்களைத் திசை திருப்பும் வகையில், சீனா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது பலியான இருவரும் திருட்டுச் சம்பவங்களோடு தொடர்புடையவர்கள் என ஷின்ஹூவா தெரிவித்துள்ளது.
மேலும் திருட்டு, சூதாட்டம் போன்ற தங்களின் குற்றச் செயல்களுக்கான தண்டனைகளில் இருந்து தப்பிக்க இதுபோல தீக்குளிப்பில் ஈடுபடும் செயல்கள் அதிகரித்து வருவதாகவும், சீனா கருத்துக்களை பரப்பி வருகிறது.
0 comments:
Post a Comment