(எஸ். எல். மன்சூர்)
2012 ஆண்டுக்கான புதிய பாடசாலை பாடநூல் விநியோகமும், 2011 ஆண்டில் சிறந்த முறையில் பாடநூல்களை சிறப்பாக பயன்படுத்திய மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகளை பாடசாலை மட்டத்தில் அதற்கான தினங்களை ஒதிக்கி, ஒழுங்கமைக்குமாறும் அதற்கான அறிவுறுத்தல்கள் அடங்கிய கடிதம் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்திலிருந்து நாட்டிலுள்ள சகல அரச பாடசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் 6ஆம் திகதி பாடநூல் விநியோகிக்கும் தினமாக பிரகடனப்படுத்தி அன்றைய தினத்தில் சகல மாணவர்களுக்கும் பாடநூல் விநியோகம் செய்தல், இதற்கான முறையான விழாவை ஏற்பாடு செய்தல், இவ்விழாவில் பாடநூல் தொடர்பான கருக்கீதத்தை இசைத்தல், பாடநூலை சிறப்பாக பயன்படுத்திய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதுடன், நூலை சிறப்பாக பயன்படுத்துவது பற்றிய உபதேசங்களை வழங்குதல் போன்ற விடயங்களை அமுல்படுத்துமாறு சகல பாடசாலை அதிபர்களையும் கல்வி வெளியீட்டுத் திணைக்கள ஆணையாளர் மற்றும் கல்வியமைச்சின் செயலாளர் ஆகியோர் ஒப்பமிட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உரிய திகதியில் இலவச பாடநூல்களை வழங்கும் பொருட்டு டிசம்பர் 5ஆம் திகதியன்று பாடநூல் விநியோக மத்திய நிலையங்களுக்குச் சென்று புத்தகங்களைப் பெற்று விநியோகிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தரம் 1 தொடக்கம் 5 வரையும், தரம் 10,11 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கும் புதிய நூல்களே வழங்கப்பட வேண்டும் எனவும், சகல மாணவர்களுக்கும் இலவசப் பாடநூல்களை பெற்றுக் கொடுப்பதில் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்திற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் சகல அதிபர்களையும் கல்வி வெளியீட்டு ஆணையாளர் கேட்டுள்ளார்.
எனவே, இலவச பாடநூல்களை பெற்றுக் கொள்கின்ற ஒவ்வொரு மாணவனும் அரசுக்கு நன்றிகூறுவதோடு ஒழுங்கான முறையில் வருடம் முழுவதும் பாவிக்கக்கூடியவாறு வைத்துக் கொள்ளவேண்டியதும் மாணவர்களாகிய உங்களது கடமையல்லவா..?

0 comments:
Post a Comment