Wednesday, November 09, 2011

சச்சினின் 100ஆவது சதம் நழுவியது


மேற்கிந்திய தீவுக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில், சேவாக் (55), சச்சின் (76), லட்சுமண் (58*) அரைசதம் அடித்து கைகொடுக்க, இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சச்சின், தனது 100ஆவது சதத்தை நழுவவிட்டார்.

இந்தியா வந்துள்ள மேற்கிந்திய தீவு அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், டில்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்ஸில் மேற்கிந்திய தீவு 304, இந்தியா 209 ஓட்டங்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் மேற்கிந்திய தீவு 180 ஓட்டங்கள் எடுத்தது. பின், 276 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இந்திய அணி, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 152 ஓட்டங்கள் எடுத்திருந்தது. சச்சின் (33), டிராவிட் (30) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

சச்சின் ஏமாற்றம்:
நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு டிராவிட் (31) ஏமாற்றம் அளித்தார். அடுத்துவந்த அனுபவ வீரர் லட்சுமணுடன் இணைந்த சச்சின், டெஸ்ட் அரங்கில் தனது 62ஆவது அரைச் சதத்தை பதிவு செய்தார். இவர், 148 பந்தில் 76 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது, தேவேந்திர பிஷூ சுழலில் எல்.பி.டபிள்யு., முறையில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் சச்சின், சர்வதேச கிரிக்கெட் அரங்கில், "சதத்தில் சதம் அடிக்கும் வாய்ப்பை மீண்டும் ஒரு முறை இழந்தார். இதுவரை இவர் 48 ஒருநாள், 51 டெஸ்ட் சதம் அடித்துள்ளார்.

லட்சுமண் அரைசதம்:
அடுத்து வந்த யுவராஜ் சிங்குடன் இணைந்த லட்சுமண், டெஸ்ட் அரங்கில் தனது 55ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். வெற்றிக்கு ஒரு ஓட்டம் தேவைப்பட்ட நிலையில் யுவராஜ் சிங் (18), டேரன் சமி பந்தில் "கிளீன் போல்டானார். தோனியுடன் இணைந்த லட்சுமண் ஒரு ஓட்டம் எடுக்க இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 276 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. லட்சுமண் (58), தோனி (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

மேற்கிந்திய தீவு சார்பில் டேரன் சமி 2, பிடல் எட்வர்ட்ஸ், சாமுவேல்ஸ், தேவேந்திர பிஷூ தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட், கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் வரும் 14ஆம் திகதி தொடங்குகிறது.

0 comments:

Post a Comment