(எஸ்.எம். அறூஸ்)
தியகம மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 23ஆவது தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் இஸட்.டி.எம். ஆசிக் 20 வயதுக்குக் கீழ் ஆண்களுக்கான குண்டு போடுதல் மற்றும் பரிதி வட்டம் வீசுதல் ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளிலும் மூன்றாம் இடத்தினைப் பெற்று வெண்கலப் பதக்கத்தினை சுவீகரித்துள்ளார்.
நிந்தவூர் அல்-மதீனா மகாவித்தியாலய மாணவரான இவர் குண்டு போடுதலில் 12.99 மீற்றர் தூரம் எறிந்தும், பரிது வட்டம் எறிதலில் 36.78 மீற்றர் எறிந்தும் வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார். தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியில் அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஒருவர் இந்த இரண்டு வகை நிகழ்ச்சிகளிலும் பதக்கம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நிந்தவூர் பிரதேசம் பல விளையாட்டு சாதனையாளர்களை உருவாக்கிய பிரதேசமாகும். அந்த வகையில் நிந்தவூரிலிருந்து இன்று ஆசிக்குடன் முப்பாய்ச்சல் வீரர் எம்.எஸ்.எம்.நுஸ்கியும் சாதனையாளர் பட்டியலில் இணைந்துள்ளனர்.
ஆசிக் அம்பாரை மாவட்ட இளைஞர் விளையாட்டுப் போட்டியில் மூன்று முதலிடங்களைப் பெற்று சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டவர். குண்டு போடுதலில் 12.04 மீற்றரும் பரிதி வட்டம் வீசுதலில் 35.23 மீற்றரும் ஈட்டி எறிதலில் 47.50 மீற்றர் தூரம் எறிந்து முதலிடங்களைப் பெற்றிருந்தார்.
இதேபோன்று 2011ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியிலும் 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டு போடுதல், பரிது வட்டம், ஈட்டி எறிதல் ஆகிய மூன்று மைதான நிகழ்ச்சியிலும் முதலிடங்களைப் பெற்று தங்கப் பதக்கத்தினை வென்றதோடு சம்பியனாகவும் தெரிவாகியிருந்தார்.
2011ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டுப் போட்டியின் முதற்கட்டமான நிந்தவூர் பிரதேச விளையாட்டுப் போட்டியில் பங்கு பற்றிய ஆசிக் குண்டு போடுதல், பரிது வட்டம் வீசுதல், ஈட்டி எறிதல் ஆகிய மூன்று நிகழ்ச்சிகளிலும் முதலிடங்களைப் பெற்றிருந்தார். இருந்தும் பரீட்சையை எதிர்நோக்கியதன் காரணமாக அம்பாரை மாவட்ட விளையாட்டு விழாவில் கலந்து கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். இதன் காரணமாக தேசிய மட்டப் போட்டியில் பங்கு பற்றும் வாய்ப்பும் இல்லாமல் போனது.
2010ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியிலும் ஆசிக் 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டு போடுதல், பரிது வட்டம், ஈட்டி எறிதல் ஆகிய மூன்று நிகழ்ச்சியிலும் முதலிடங்களைப் பெற்று தங்கப் பதக்கத்தினை சுவிகரித்து சம்பியனாகவும் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாண படசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் நிச்சயமாக அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டுப் போட்டியில் ஆசிக் மேற்படி மூன்று மைதான நிகழ்ச்சியிலும் தங்கப் பதக்கத்தினைப் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தியகம ஹோமாகம மகிந்த ராஜபக்ஷ அரங்கில் நடந்த போட்டியில் கலந்து கொள்ளாமை எல்லோருக்கும் ஏமாற்றமாகவே அமைந்தது.
இவர் இப்போட்டியில் கலந்து கொள்ளாமை பரீட்சையை எதிர்நோக்கியதாகும் எனக் கூறப்படுகின்றது. இருந்தும் பாடசாலை நிர்வாகம் தேசிய விளையாட்டுப் போட்டியை கருத்திற்கொண்டு பரீட்சையை ஒழுங்கு படுத்தியிருந்தால் நிந்தவூர் அல்-மதீனா மகாவித்தியாலயம் தேசிய ரீதியில் பதக்கம் பெறும் வாய்ப்பைப் பெற்றிருக்கும்.
இவரது வெற்றியில் விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.அனஸ், பாடசாலை ஆசிரியர்களான எஸ்.எம்.இஸ்மத், எஸ்.எம். இர்சாத் மற்றும் இளைஞர் சேவை உத்தியோகத்தர் எம்.ஹறூன், பாடசாலை அதிபர் ஆகியோர் பெரும் பங்காற்றி வருகின்றனர்.
ஆசிக்கின் வெற்றி இன்று முழுக் கிழக்கு மாகாணத்திற்கும் பெருமை தரும் விடயமாக மாறியுள்ளது. அவரது வெற்றியை பாராட்டுவதோடு, எதிர்காலத்தில் ஆசிக் தேசிய அணியில் இடம் பிடித்து சாதனை படைப்பதற்கு கிழக்கு மாகாண சபை மற்றும் அரசியல் வாதிகள், தனவந்தர்கள் முன்வரவேண்டும்.
இந்த வெற்றி மூலம் தான் மிகவும் சந்தோசமடைவதாகவும், பயிற்சியாளர், எனது குடும்பம், இளைஞர் சேவை அதிகாரிகள் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாகவும், எதிர்காலத்தில் தேசிய அணியில் இடம் பிடித்து நாட்டுக்குப் பெருமை தேடிக்கொடுக்க வேண்டும் என்பதே எனது இலட்சியமாகும் என ஆசிக் துருவம் இணையத்தளத்துக்கு கருத்து தெரிவிக்கும்போது தெரிவித்தார்.
சிறந்த பயிற்சிகள் ஆசிக்கிற்கு வழங்கப்பட்டால் தேசிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் சாதனைகள் படைத்து கிழக்கு மாகாணத்திற்கும், நிந்தவூர் பிரதேசத்திற்கும் பெருமை தேடிக் கொடுப்பார் என நம்பலாம். அவரை துருவம் இணையத்தளமும் சேர்ந்து வாழத்துகிறது.


0 comments:
Post a Comment