(எஸ்.எல். மன்சூர்)
சிறுவர்களின் பிரச்சினைகளை நீதிமன்றத்தின் மூலம் தீர்வைக்காணும் முகமாக இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் சிறுவர் நீதிமன்றம் ஒன்று திறக்கப்படுகின்றது. இந்நிகழ்வில் இலங்கையின் நீதியமைச்சர் கௌரவ றவூப் ஹக்கீம், உயர்நீதிமன்ற நீதியரசர் ஸ்ரீராணி பண்டாரநாயக்க மற்றும் யுனிசெப் அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நீதிமன்றத்தினை அமைப்பதற்கு யுனிசெப் நிறுவனம் நிதியுதவி அளித்துள்ளது. நாட்டில் சிறுவர்கள் மீதான வன்முறைகளும், துஷ்பிரயோகங்களும் அண்மைக்காலமாக அதிகரித்துச் செல்கின்ற ஒரு நிலைமை தோற்றம் பெற்றுள்ள இக்கால கட்டத்தில் இவ்வாறான சிறுவர் நீதிமன்றங்கள் இவர்களது வாழ்வை மேம்படுத்தும் வகையில் உதவிடும் நோக்கில் இவை திறக்கப்படுவது சிறப்பானதாக அமையும்.
அத்துடன் சிறுவர்கள் மீதுள்ள வழங்குகளை துரிதப்படுத்தி தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதே நீதியமைச்சின் நோக்காகவும் உள்ளது. இலங்கையின் முதலாவது சிறுவர் நீதிமன்றம் பத்தரமுல்லையில் அமைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இது இரண்டாவது சிறுவர் நீதிமன்றமாகும். இதுபோன்ற நீதிமன்றங்கள் நாட்டின் இதர பகுதிகளிலும் அமைகின்றபோது சிறுவர்கள் மீதான அடக்குமுறைக்கும், அவர்கள் எதிர்நோக்கும் சவால்களுக்கும், சிறப்பான கல்வியை மேற்கொள்ளவும் உதவியாக அமையும் எனலாம்.

0 comments:
Post a Comment