Friday, November 25, 2011

ஆளில்லாத வீட்டில் 3 இலட்சம் திருட்டு

(கலாநெஞ்சன்) 
ஆளில்லாத வீடொன்றுக்குள் இரவு வேளையில் புகுந்து மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர். நீர்கொழும்பு தளுபத்தை பல்லன்சேனை வீதியில் 5 ஆவது ஒழுங்கையில் உள்ள வீடொன்றிலேயே வியாழன் இரவு 9 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது .

வளையல்-1, மோதிரங்கள்-4 , நெக்லஸ்-1, தாலி தட்டு –1, கை சங்கிலி –1 , என்பனவே திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, திருட்டுச் சம்பவம் இடம்பெற்ற வீட்டில் கணவன் மனைவி இருவர் வசித்து வருகின்றனர்.

கணவன் காலையில் கொழும்புக்கு தொழிலுக்கு சென்று விட்டு இரவு வேளையில் வீட்டுக்கு திரும்புவார். அதுவரையில் மனைவி அதே ஒழுங்கையில் உள்ள அவரது பெற்றோரின் வீட்டுக்கு சென்று தங்கியிருந்து கணவன் இரவு திரும்பி வந்த பிறகு தனது வீட்டுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார் . இந்நிலையில் நேற்றிரவு 9 மணியளவில் இருவரும் தமது வீட்டுக்கு சென்ற போது, இனந் தெரியாத நபர் ஒருவர் வீட்டின் பின்பக்கமாக மதில் ஒன்றில் ஏறி தப்பிச்செல்வதை இருவரும் கண்டுள்ளனர்.

இதனை அடுத்து அவர்கள் வீட்டுக்குள் வந்த போது வீட்டின் பின்பக்க கதவு திறக்கப்பட்டிருப்பதை அவதானித்துள்ளனர். பின்னர் வீட்டின் அறையை சென்று பார்த்த போது அலுமாரி உடைக்கப்பட்டு அதிலிருந்த மூன்று இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட நகைகளும் ஒரு தொகை பணமும் திருடப்பட்டதை கண்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

0 comments:

Post a Comment