Friday, November 11, 2011

சார்க் நாடுகளிடையே 4 ஒப்பந்தங்கள்


மாலைதீவின் அத்து நகரில் நடைபெற்ற 17ஆவது சார்க் உச்சிமாநாடு நேற்று நிறைவடைந்தது. மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் நஷீட் தலைமையில் இடம்பெற்ற இந்த மாநாட்டில் பிரகடனமொன்றும் வெளியிடப்பட்டது. இப்பிரகடனம் ‘அத்து பிரகடனம்' என பெயரிடப்பட்டுள்ளது. இதேவேளை, 18ஆவது சார்க் உச்சிமாநாட்டை நேபாளத்தில் நடத்துவதற்கும் சார்க் தலைவர்கள் ஏகமனதாகத் தீர்மானித்துள்ளனர்.

மாலைதீவின் அத்து நகரில் ஆரம்பமான 17ஆவது உச்சிமாநாட்டில் இலங்கை உட்பட 8 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டு, பிராந்திய நாடுகளுக்கிடையிலான வர்த்தகம், நட்புறவுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்ந்தனர். இரண்டாவது நாளான நேற்றையதினம் சார்க் உறுப்பு நாடுகளுக்கிடையில் 4 முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகின.

இயற்கை அனர்த்தங்களுக்கான உடனடி பதிலளித்தல் தொடர்பான சார்க் ஒப்பந்தம், உடன்பாட்டு மதிப்பீட்டை ஏற்றுக்கொள்ளல் பற்றிய பல்தரப்பு வேலைத் திட்டத்திற்கான சார்க் ஒப்பந்தம், பிராந்திய தர நிர்ணயங்களை அமுல்படுத்துவது தொடர்பான சார்க் உடன்பாடு மற்றும் விதை வங்கி ஒன்றிக்கான சார்க் ஒப்பந்தம் ஆகிய நான்கு ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகின.

17வது சார்க் உச்சிமாநாட்டின் இறுதிநாளான நேற்றையதினம் மாநாட்டு மண்டபத்துக்குச் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, மாலைதீவு ஜனாதிபதி நஷீட் வரவேற்றார். இதன் பின்னர் சார்க் வெளிநாட்டு அமைச்சர்கள் ஒப்பந்தங்களின் கைச்சாத்தி ட்டனர்.

சார்க் உச்சிமாநாட்டில் பார்வையாளர்க ளாகக் கலந்துகொண்ட நாடுகளின் பிரதிநிதிகள் தமது அறிக்கைகளை சமர்ப்பித்து உரையாற்றியிருந்தனர். அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஐரோப்பிய ஒன்றியம், தென்கொரியா, ஈரான், அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுடைய பிரதிநிதிகளின் தலைவர்களே இந்த உரைநிகழ்த்தினர்.

அடுத்த வருடத்தில் சார்க் பிராந்திய நாடுகளுக்கு 300 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கப்படுமென இங்கு உரையாற்றிய சீனாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் உறுதியளித்தார். சார்க் நாடுகளுக்கு நிதியுதவி மற்றும் புலமைப்பரிசில்கள் அதிகரிக்கப்படு மென அவுஸ்திரேலியப் பிரதிநிதி உறுதிமொழி வழங்கினார்.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகளைப் பலப்படுத்துவதற்கு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் மற்றும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுக்கிடையில் செய்துகொள்ளப்பட்ட வர்த்தக உடன்படிக்கைகளை வரவேற்பதாக அமெரிக்காவின் சார்பில் கலந்துகொண்ட கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் ரெபேர்ட்.ஓ.பிளேக் கூறினார்.

17ஆவது சார்க் உச்சிமாநாட்டின் முடிவுரையை இம்மாநாட்டுக்குத் தலைமை தாங்கிய மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் நiட் ஆற்றினார்.

0 comments:

Post a Comment