Friday, November 04, 2011

வரவு-செலவுத் திட்டதில் மக்களின் அபிலாஷைகள்

இன்று நாட்டின் நாலாபுறங்களும் அபிவிருத்தி மயமாகியுள்ள நிலையில் இதற்குதவியாக மகிந்த சிந்தனைகள் மிகவும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளன. நாட்டின் தலைவர் சிறப்பாக இருக்கின்றபோது நாட்டு மக்களும் சிறப்பாக காணப்படுவர் என்பதற்கொப்ப அதிகௌரவ ஜனாதிபதி அவர்களின் சமாதான நோக்கை எட்டுகின்ற யுத்தமற்ற சூழ்நிலையை ஏற்படுத்தியதன் விளைவு இன்று நாட்டின் சகல பகுதிகளுக்கும் மக்கள் எவ்வித சோதனைச் சாவடிகளின்றி, எவ்விதமான தயக்கங்களும் இன்றி அனைவரும் நினைத்தமாத்திரத்தில் நினைத்த இடத்திற்கு செல்வதற்குரித்தான உண்மையான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதற்கு நாட்டு மக்கள் நமது ஜனாதிபதிக்கு நன்றியுடையோராக இருக்கவேண்டிய கடப்பாடு நம் அனைவருக்கும் உண்டு.

யுத்தத்தை ஒழித்து நாட்டை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுத்த மகனை இன்று யுத்தக்குற்றவாளி என்ற பேரில் அமெரிக்காவும் அதன் அடிவருடிகளும் நமது தலைமகனை உலக நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்கு ஐ.நா. அமைப்பினர் வரிந்து கட்டிக் கொண்டுள்ள நிலையில் எவ்விதமான தயக்கமுமின்றி நாட்டின் அபிவிருத்திக்கு தம்மால் முடியுமான அளவு பாடுபட்டுழைப்பதை அண்மைக்காலம் வரையில் அனைவரும் பார்த்துக்கொண்டேதான் இருக்கின்றனர். தலைநகருக்கு என்று மட்டுப்படுத்தப்பட்டிருந்த பல நிறுவனங்களும், அமைப்புக்களும் இன்று நாடுமுழுவதும் வியாபித்து மக்களின் இலகுவான வாழ்க்கைக்கு உதவி நிற்கின்ற ஒரு விடயத்தை கண்டுகொண்டு வருகின்றோம். அம்பாந்தோட்டை துறைமுகம், ஒலுவில் துறைமுகம் போன்ற பாரிய அபிவிருத்திகளும், யாழ் பிரதேசத்திற்கான அபிவிருத்திகளும், தூர்ந்து போன நிலையிலுள்ள இதர தொழிலகங்கள் போன்றவற்றை மீண்டும் புனருத்தாபனம் செய்து மக்களின் பாவனைக்கு விடக்கூடிய நிலைமை உருவாகி, இப்போது நாடு சுதந்;திரமான தோற்றம் பெற்றுள்ளமை மிகவும் வரவேற்கத் தக்கதாகும்.

பல்வேறு சிந்தனைகளின் ஊடாக நாட்டின் அபிவிருத்தியையும், சமாதானத்தையும் ஏற்படுத்திய நமது தலைவரின் சிந்தனைகளையும், வெற்றிவாகைகளையும் மழுங்கடிப்பதற்காக ஐ.நா. செயலாளர் கங்கணம் கட்டி கொண்டு ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிய வைத்து சிறிய நாடுகளையும் தன் கைபொம்மையாக அடிமைப்படுத்திட வேண்டும் என்பதையே கூறிக்கொண்டு யுத்தக் குற்றத்திற்காக விசாரணை என்ற பெயரில் தான்தோன்றித்தனமாக செயற்பாடுகளில் இறங்கியுள்ளமை நாட்டு மக்களை மிகவும் கவலை கொள்ளவைத்துள்ளது. இச்சந்தர்ப்பத்தில் ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிய மறுத்து தனது மண்ணில் வீரமரணம் எய்திய முன்னாள் லிபியாவின் தலைவர் முஅம்மர் கடாபி அவர்கள் அமெரிக்காவின் தற்போதைய தலைவரைப்பார்த்து கேட்ட கேள்வி “ஜோன் எப் கெனடி, ஆபிரகாம் லிங்கன் போன்றோருக்கு ஏற்பட்டகதிதான் எற்படும் என்று ஒருகட்டத்தில் கூறிய விடயத்தை நாமும் நினைவுபடுத்துதல் இக்கால கட்டத்திற்கு பொருத்தமாக இருக்கும்.


அமெரிக்காவின் எடுப்பார் கைப்பிள்ளையாக இயங்கிவருகின்ற ஐ.நா. நிறுவனம் மேற்கொண்ட பிழையான தீர்மானம் காரணமாக மத்திய கிழக்கில் குறிப்பாக ஈராக் விடயத்தில் மிகவும் தலைக்குணிவை ஏற்படுத்திக் கொண்டது. அதேபோல் ஆப்கானிஸ்தான் பிரச்சினையிலும் ஒசாமா பில்லேடனைப் பிடிக்கப் போய் மலையைக் குடைந்து எலி பிடித்த கதைபோல் ஆகிவிட்ட நிலையில் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் குண்டுபோட்டு அநியாயமாக அப்பாவி மக்களின் உயிரைப் பறித்துக்கொண்டுவரும் அமெரிக்காவின் மனித உரிமை மீறல்களுக்கு எந்த நீதிமன்றத்தில் ஏற்றுவது என்பதை ஐ.நா. அமைப்பினால் வெளிப்படையாக கூறமுடியுமா? ஈராக்கை சின்னாபின்னமாக்கி பாலைவனச் சிங்கத்தின் கழுத்தில் தூக்குமாட்டியபோல் இலங்கையின் தலைவரையும் தூக்குகயிறு மாட்டலாம் என்று பகற்கணவு காணுகிறது இந்த வல்லரசு அமெரிக்காவும் அதன் துணைநாடுகளும்.

யுத்தம் பயங்கரவாதிகளுக்கு எதிராக சுமார் 30 ஆண்டுகள் நீடித்திருந்த நிலையில் ஒரிரு ஆண்டுகளுக்குள் முடிவுக்கு
வந்ததை பொறுத்துக் கொள்ளமுடியாத ஆயுதவிற்பனையாளர்களான வல்லரசுகள் இன்று ஆயுத விற்பனையற்று பேதலித்துப் போயுள்ள நிலையில் மீண்டும் ஒரு பயங்கரவாதத்தை உண்டுபண்ணி அரசியல் குழப்பங்களையும், மக்களையும் குழப்பிவிடுவதற்கு பல்வேறு எத்தனங்கள் எடுத்தபோதிலும் அது பலனிக்கவில்லை என்பதனால்தான் இந்த விசாரணை. ஐ.நா. அமைப்பினால் நியமிக்கப்பட்ட குழுவின் செயற்பாட்டை மிகவும் உண்ணிப்பாக கவனித்து தம்பக்கம் இழுப்பதற்கு இவ்வல்லரசு பேரம் பேசுகின்றன. முடியாத வைரக்கட்டையாக எதற்கும் துணிந்துள்ள நிலையில் நமது நாட்டு ஜனாதிபதியின் தளராதமனம் மிகவும் உறுதிப்பாட்டுடன் காணப்படுவதன் காரணமாக நாட்டு மக்களும் அவர்பக்கமே உள்ளனர் என்பதை அண்மைக்கால தேர்தல் வெற்றிகள் உறுதிப்படுத்தியதை அறிந்துகொள்ளுமா அமெரிக்க வல்லரசு.

உலகைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க நினைக்கும் அமெரிக்காவில் அளவுக்கதிகமான அணுவாயுதத்தை குவித்து வைத்துள்ள நிலையில் தவறிப்பிறந்த பிள்ளைபோல் அமெரிக்காவின் செல்லப் பிள்ளையான இஸ்ரவேலை மத்திய கிழக்கில் மேயவிட்டு அறபுக்களின் மீதான கொடுமைகளை நாள்தோறும் குறிப்பாக பலஸ்தீனத்தில் அரங்கேற்றியே வருகின்றது. ஆனால் கண்டுகொண்டதா அமெரிக்கா? இல்லையே? ஏன் இந்த பாரபட்சம். என்பதுதான் தெரியவில்லை. ஈரான் இஸ்ரவேலுக்கு எதிராக போர்க் கொடிதூக்கும் போது அமெரிக்காவோ ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளையும், எதிர்ப்புக்கள் போன்றவற்றையும் ஏற்படுத்தி உலகில் தனிமைப்படுத்த முனைந்து வருகின்றது.

அதுமட்டுமல்ல இலங்கைக்கு அதிகூடியளவு நிதியை ஈரான் அரசு வழங்குவதற்கு ஒத்துக் கொண்டது. உமாஓயா திட்டத்திற்கு அதன் முழுமையான பங்களிப்புடன் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்ற அதேவேளை நாட்டின் கிராமப்புறங்களிலுள்ள மின்சார மேம்பாட்டுக்கும் ஈரான் உதவியே வருகின்றது. இதனை பொறுக்க முடியாத நிலையில் அமெரிக்கா இலங்கை மீதான நிலைப்பாட்டில் தான்தோன்றித் தனமாக நடந்து கொள்வது இலங்கை மக்களின் விரோதத்தை சம்பாதிக்கவே செய்யும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமிருக்காது என்றேகூறலாம்.

இன்று வெள்ளைக் கொடி சமாச்சாரத்தை வைத்துக்கொண்டு இலங்கையின் உள்விவகாரங்களில் மூக்கை நுழைப்பதற்கு எத்தனித்துக்கொண்டு வருகின்றது. அதில் ஒருகட்டம்தான் விசாரணைக்குழுக்களுக்களும், ஆணைக் குழுக்களும். இவர்களை உள்நாட்டுக்குள் விடக்கூடாது என்பதில் அமைச்சர் விமல் வீரவன்ச போன்ற தலைவர்கள் விடாப்பிடியாக இருந்தனர். ஏதோ ஒரு வடிவில் நாட்டில் காணப்பட்டுவந்த பயங்கரவாத பிரச்சினை முடிவினைக் கண்டுவிட்டது. ஆனால் தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வை முன்வைப்பதற்குரிய முஸ்தீபுகளை எடுத்து விரைவில் தீர்வுகளை எடுத்தாளவேண்டியது நமது அரசின் கடப்பாடு. ஆதலால்தான் இன்றைய சூழலில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விளைவுகளிலிருந்து முதலில் தம்மையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற வேண்டியது அரசினதும் மக்களினதும் கடமையாகும்.

அதேவேளை இவ்வாறு பக்கபலமாக அரசுடன் காணப்படுகின்ற மக்களின் பிரச்சினைகளையும் ஓரளவுக்கு நிவர்த்திக்கின்ற ஒரு வரவு செலவுத்திட்டத்தை முன்வைக்க வேண்டுமென்பதே மக்களின் கோரிக்கையாகும். விலையேற்றம், வாழ்க்கைச் செலவு அதிகம் போன்றவைகள் மக்களின் வாழ்வாதாரத்தில் அதிக சுமையை ஏற்றி வருகின்ற நிலைமையில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு சுமார் 10.000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டால்தான் வாழ்க்கையை ஓட்ட முடியும் என்பதனையும் அரசின் தலைவரும், நிதியமைச்சருமான கௌரவ ஜனாதிபதி அவர்கள் இக்கால கட்டத்தில் உணர்ந்து அதற்கேற்றவாறு சம்பள அதிகரிப்புச் செய்யப்பட வேண்டும் என்பது அரச ஊழியர்களின் எதிர்ப்பார்ப்பு.

சாதாரண மக்களின் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றுவதற்காக வழிவகைகளை இந்த (2011) ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் முன்வைத்து அதனை நடைமுறைப்படுத்துவதையே மக்கள் எதிர்பார்க்கின்றனர். அத்துடன் நாட்டு மக்களின் ஒற்றுமைக்கான அத்திவாரமாக இனப்பிரச்சினைத் தீர்வில் உடனடி நடவடிக்கை எடுத்து ஏனைய நாடுகளுடன் கைகோர்க்கின்ற நிலைமைக்கு நாட்டைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதையும் அரசின் தலைவர் என்ற வகையில் மக்களுக்கு உதவுதல் அவசியமாகும். பல்வேறு திட்டங்களின் அடிப்படையில் அபிவிருத்திக்கான வழிகளை திறந்துவிட்ட நாட்டின் தலைவரில் மக்களுக்கு அபரிதமான நம்பிக்கை உண்டு என்பதற்கு தேர்தல்கள் கட்டியம் கூறியதை மறந்து விடமுடியாது.

அந்தவகையில் நமது உள்நாட்டு உற்பத்திகளை அதிகரித்து மற்றவரின் கைகளில் தங்கிவாழ்வதிலிருந்து முதலில் நமது பொருளாதார மேம்பாடுகளில் எம்மைநாம் உறுதிப்படுத்துதல் வேண்டும். அதற்கான வழிவகைகளுக்கு வேண்டிய தொழிற்நுட்ப அறிவுகளை பாடசாலைகளில் நவீனத்துமிக்கதானமுறையில் கல்வியறிவுகள் புகட்பட வேண்டும். அப்போதான் பிறரின் தயவில் இருந்து விடபடலாம். ‘என்னவளம் இல்லை இந்த திருநாட்டில். ஏன் கையேந்த வேண்டும் வெளிநாட்டில்' என்றொரு பாடல் எமது காதுகளுக்கு கேட்கின்றன. இருக்கின்ற வழங்களைக் கொண்டு வெற்றிகரமான முறையில் நமதுநாடு, நமது மக்கள் என்கிற பேதமற்ற இன முரண்பாடுகள் அற்ற நிலையில் நமது ஒவ்வொருவர் மீதுமுள்ள கடமைகளை ஒழுங்கு முறையில் செய்கின்றபோது மகிந்த சிநதனையில் கூறப்பட்டபடி ஆச்சரியமிக்க நாடாக கட்டியெழுப்ப எமது முழுப்பலத்தையும் பிரயோகித்து அபிவிருத்தியின்பால் வெற்றிநடை போட்டு யுத்தத்தில் வென்றது போல் அபிவிருத்தியிலும் புரட்சியை ஏற்படுத்தி மற்றயவர்களுக்கு முன்மாதிரியாக விளங்குவதற்கும் எம்மை நாம் அர்ப்பணிப்போம்.

அட்டாளைச்சேனையிலிருந்து...
- செங்கதிரான்

0 comments:

Post a Comment