(கலாநெஞ்சன்)
இவ்வருட முதல் 6 மாத காலப்பகுதியில் வடபகுதியில் முப்பது சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் 12 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 9 சம்பவங்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 9 சம்பவங்களும் இடம் பெற்றுள்ளன.
சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களில் 18 வயதுக்கு குறைந்த சிறுமிகளே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
1995 முதல் 2010 ஆண்டு காலப்பகுதி வரை 6 ஆயிரத்து 89 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாக இப்பிரதேசத்திலிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இதேவேளை, சிறுவர் சிறுமியர் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாவது அதிகரித்து வருவதாக பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் பிள்ளைகள் தொடர்பில் அசட்டையாக இருப்பதாலும் பெற்றோர் தமது பிள்ளைகளை உறவினர்களிடம் ஒப்படைத்துவிட்டு வெளிநாடு செல்கின்றமையினாலும் சிறுவர்கள் பெரியவர்களினாலும் சம வயதுடையவர்களாலும் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாடசாலை செல்லும் 16 வயதுக்குட்பட்ட மாணவிகள் காதல் தொடர்பு வைத்திருப்பதன் காரணமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாவதுடன், அவர்கள் சட்டரீதியற்ற முறையில் கணவன் மனைவியாக நடந்து கொள்வதாகவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

0 comments:
Post a Comment