Wednesday, November 16, 2011

நாய்கள் படுத்துறங்கும் கல்விக் கூடங்கள்


(துருவம் வாசகனின் பார்வையில் டியூஷன் கொட்டகைகள்)

இன்று அரசு கல்விச் சீர்திருத்தம், மாலைநேர பாடசாலை, புலமைப் பரிசில் பரீட்சை மீள்பரிசீலனை, க.பொ.த. சாதாரண தரத்திற்கு மூன்று பாடங்கள், பரீட்சைகள் முறைகளில் மாற்றம் என்றெல்லாம் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் நாட்டில் டியூஷன் கல்வியில்தான் இன்றைய பாடசாலைகளின் நிலை தங்கியுள்ளது என்கிற பெற்றோர்களின் வாதங்களில் நியாயம் இல்லாமலும் இல்லை.

ஏனெனில், பாடசாலைகள் மாணவர்களின் ஒழுக்க விழுமியங்களுடன்கூடிய நாட்டின் தலை சிறந்த எதிர்கால நற்பிரஜையை உருவாக்க வெளிக்கிட்ட பயணத்தில் ஏற்பட்ட அறிவுப் புரட்சியின் ஒரு காலகட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பாரிய நடைமுறைப் பிரச்சினைகள் ஒருபக்கம், போட்டித்தன்மையும், போராட்டத்தன்மையும், வறுமை, வேலைவாய்ப்பின்மை, கற்ற கல்வி வேறு கடமையாற்றும் தொழில்வேறு என்றெல்லாம் நாமே நமது கல்வித் திட்டத்தை அடிக்கடி திரும்பிப்பார்த்து பேசிக் கொள்ளும் நிலைக்குள் இன்றைய கல்வித் திட்டம் இருந்தாலும், போட்டி நிறைந்த பாடசாலைக் கல்வித்திட்டத்தில் டியூஷன் எனப்படுகின்ற காசுக்கான கல்வியும் முக்கியமான ஓர் அங்கம் என்பதை யாரும் மறுக்கமுடியாத கருத்தாகும்.  

பரவாயில்லை, அதிகரித்துச் செல்லும் மக்கள் மத்தியில் போட்டி என்பது இயற்கையாகவே தோன்றும் நிலையாக காணப்பட்டாலும் இந்த பாடசாலைக் கல்வியுடன் போட்டி போடுகின்ற தனியார் கல்விக்கூடங்கள் பல சிறப்பான தோற்றத்துடன் மாணவர்களைக் கவர்ந்து விடுகின்ற கட்டிடங்களும், கவர்ச்சியான கற்றல் நடவடிக்கைகளும் ஒருபக்கம் இருக்க இன்னொரு பக்கம் இந்த டியூஷன் கலைக்கூடங்கள் மாடுகள் அடைக்கின்ற ஒரு தொட்டிக் கூடமாக காணப்படுவது மிகவும் கவலைக்குறிய விடயமாகும்.


உண்மையில் பணத்தினைக் கொடுத்து கற்கின்ற இவ்வாறான கொட்டில்களில் இரவில் நாய்களும், பகற் காலங்களில் மாடுகளும் அடைகின்ற இந்த தொட்டிகளுக்குளுக்குள்தான் டியூஷன் நடாத்தி பணத்தை சம்பாதிக்கின்றனர். நாட்டிலுள்ள நகரங்கள் தொடக்கம் கிராமங்கள் வரைக்கும் இதுபோன்ற தொழுவங்கள் காணப்படுவதை பிரதேச சபையினரோ, பிரதேச பொதுச் சுகாதார அதிகாரிகளோ, சுற்றாடல் ஆர்வலர்களோ, ஏன் பிரதேசத்தில் தங்களுடைய பிள்ளைகள் கற்கின்ற இடத்தை பார்த்தும் பார்க்காத பெற்றோர்களோ, நலன் விரும்பிகளோ என்று யாருமே கவனிப்பதில்லை. 

நோய்த்தாக்கத்தை ஏற்படுத்தும் நுளம்புகளும், தெள்ளுகளும் வியாபித்து உருவாகின்ற இவ்வாறான கொட்டில்களைப் பார்வையிட்டு பரிசோதித்து டியூஷன் நடாத்துகின்ற டியூட்டரி போடிமார்களை கண்டுபிடித்து உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும். இதுபோன்ற கொட்டில்கள் கிழக்கு மகாணத்தில் பல இடங்களில் காணப்பட்டாலும் குறிப்பாக அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, கல்முனை போன்ற இடங்களில்தான் மிக மோசமான நிலையில், இந்நிலையங்கள் காணப்படுகின்றன.  

எனவேதான், இப்பிராந்தியத்திலுள்ள பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் இதனைப் பார்வையிட வேண்டும் மாணவர்களின் கல்வியில் பாடசாலைகளைப்போல் இல்லாவிட்டாலும் பரவாயில்லை மாணவர்களுக்கு நோய்த்தாக்கம் ஏற்படாத வண்ணம் துப்பரவான நிலையில் இந்நிலையங்களை வைத்திருப்பதற்கான வேண்டுகோளை விடுவதற்கு நடவடிக்கை எடுப்பார்களா? ஒழுங்க விழுமியத்துடன், சுகாதாரமான கல்வியை வழங்கும் நாட்டையும், மக்களையும் கட்டியெழுப்ப உதவிடுவதற்கு ஒத்துழைப்பு வழங்குவார்களா? 

இப்படிக்கு,
துருவம் வாசகன்

0 comments:

Post a Comment