Friday, November 25, 2011

தலைமன்னார் மக்களுக்கு காணிகள்

(இர்ஷாத் றஹ்மத்துல்லா) 
மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார் பியர் கிராமத்தில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம்,தமிழ் மக்கள் தமது வீடுகளை அமைத்துக் கொள்வதற்காக, தற்போது அவர்களினால் துப்பரவு செய்யப்பட்ட காணியின் தேவையான அளவு அம்மக்களுக்கு வழங்கப்படவுள்ளதாக காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புன்சி ஹேவா தெரிவித்துள்ளார்.

கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் ஜனாதிபதியை வியாழக்கிழமை சந்தித்து வடக்கில் மீள்குடியேறியுள்ள மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதுடன், தலைமன்னார் பியர் கிராம மக்களின் பரிதாபகரமான நிலை குறித்தும் விளக்கமளித்திருந்தார்.

அமைச்சர் றிசாத் பதியுதீன் எடுத்துக் கொண்ட முயற்சியின் பலனாகவே,ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,இன்று அதற்கான பணிப்புரையினை தனக்கு வழங்கியதாக ஆணைக்குழுவின் தலைவர் புன்சிஹேவ மேலும் கூறினார்.

தற்போது தலைமன்னார் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட மக்கள் மீள்குடியேறியுள்ளதாக கூறிய அவர்,இவர்களுக்கான காணிகளை பகிர்ந்தளிப்பது தொடர்பாக வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அதேவேளை தற்போது மீள்குடியேறியுள்ள மக்கள் இக்காணியில் உட்புகுவதற்கு பொலிஸாரினால் விடுக்கப்பட்ட தடை குறித்து  ஆணைக்குழுவின் தலைவரிடம் கேட்டபோது,பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டினை விலக்கிக் கொள்ளவுள்ளதாக கூறினார்.

தலைமன்னார் மற்றும் வடக்கில் மக்களின் மீள்குடியேற்றம் இடம்பெறும் போது அவற்றை தடை செய்யும் சதிகள் இடம் பெறுவதால்,அந்த பாதிக்கப்படும் மக்களின் நியாயத்தை தட்டிக்கேட்க தமது அமைச்சு பதவி தடையாக இருக்குமெனில், பதவி துறந்து மக்களின் கோரிக்கை வெற்றிபெற போராட தயார் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த காணியினை மக்களுக்கு என்ன தடை வந்த போதும் மக்களுக்கு பெற்றுக் கொடுக்க ஒரு போது பின்னிற்கப் போவதில்லையென்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாருக் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment