Monday, November 28, 2011

'இருக்கிறம்' ஊடாக சுயதொழில் உதவிகள்


‘இருக்கிறம்’ சஞ்சிகையின் ஊடாக கடந்த 25.11.2011 அன்று வன்னியில் போரினால் பாதிக்கப்பட்டு தற்போது பெண்கள் தலைமை தாங்கும் இரு குடும்பங்களுக்கு சுயதொழில் வாய்ப்புக்கான உதவிகள் வழங்கப்பட்டன. கனடா வாழ் தமிழரான திருமதி. ராணி சுந்தரலிங்கம் என்ற தனி நபரொருவரால் வழங்கப்பட்ட 400 கனடியன் டொலர்களைக் கொண்டே இவ்வுதவி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

உதவி பெற்ற தொண்டமான் நகரைச் சேர்ந்த நடராசா சாந்திக்கு ஒரு கண் பார்வை குறைவு. இவருக்கு ஐந்து பிள்ளைகள்.  மேசன் வேலை செய்து வந்த இவரது கணவனான நடராசா யுத்தத்தில் ஒரு கையை முழுமையாக இழந்துவிட்டார். நடராசா எம்மிடம் உரையாடும்போது ‘யுத்தத்தில கைய இழந்து ஒரு தொழில் முயற்சியும் இல்லாம இப்போது வீடுகளில இருக்கிறம். எங்கட வாழ்வாதாரத்திற்கு இதுவரை எந்தவொரு நிறுவனமும் இதுவரை ஒரு உதவியும் செய்யல்ல. நீங்கள் வந்து எங்களைப் பார்த்துச் சென்று இப்போ உதவி செய்து இருக்கீங்க. இதவச்சி இனி நாங்க எங்கட வாழ்வாதாரத்த பெருக்குவம் எண்டு ஆசப்படுறம்’ என்றார். 

‘எங்களுக்கு ஒரு நிவாரணமும் இல்ல. நாங்களும் வருமானத்த தேடணும் எங்கட பிள்ளைகளிண்ட படிப்புச் செலவ பார்க்கணும் எண்டு நினைச்சிட்டிருந்தம். இந்த நிலைமையில் எங்களுக்கு உதவி செய்ய நீங்கள் எல்லாரும் முன்வந்து இருக்கீங்க. எங்கட குடும்பத்தின் சார்பில் உங்களுக்கு நன்றி’ என்றார் நடராசா சாந்தி. 

உதவி பெற்ற இன்னொரு குடும்பத் தலைவியான விஜயகுமார் மனோகரவதனிக்கு இரண்டு பிள்ளைகள். கணவன் தடுப்பில் இருக்கின்றார். இவர் எம்முடன் உரையாடும்போது ‘நீங்கள் செய்த உதவியை வைத்து இனி எனக்கு சுயமாக சம்பாதித்துக் கொள்ளமுடியும் என்ற நம்பிக்கை வந்திருக்கு. உங்களுக்கு என் நன்றிகள்’ என்றார்.

குடும்பத்துடன் சந்தோசமாக தொழில் செய்து வாழ்ந்து வந்த குடும்பங்களின் சந்தோசம் யுத்தத்தால் சிதைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு குடும்பங்களும் சிறு உதாரணங்கள் மட்டுமே. எம்மால் முடிந்த இந்த சிறு உதவிகளைப் பெற்றுக்கொண்ட அக்குடும்பங்கள் மிகுந்த சந்தோஷமடைந்தார்கள்.





0 comments:

Post a Comment