Friday, November 11, 2011

டெங்கு ஒழிப்புக்கு எதிரான சவால்கள்


மழை பெய்தால் வெள்ளம் ஏற்படும். ஆனால் இன்று மழைபெய்தால் டெங்கு என்கிற ஆட்கொல்லி நோயுமல்லவா சேர்ந்து வருகின்றது. அடிக்கடி எம்மை அச்சுறுத்தி வரும் இந்நோய்க்கு நாம் முடிவுகட்ட வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். நாட்டில் பரவலாக மழை பெய்து வருகின்றது. நோய்த்தாக்கத்தினால் காலம் நேரம், செலவு, மனஉளைச்சல் போன்றனவும் ஏற்படுவது நமக்குத் தெரியாததா என்ன. அதனால்தான் அரசும் மக்களைக் காப்பாற்ற நினைத்து டெங்கு பற்றிய அறிவிப்புக்களை செய்து கொண்டே வருகிறது.

மனிதர்களாகிய நாம்தான் இதனைக் கவனிப்பதில்லை. துன்பம் வந்தபோது துயரம் கொள்வதைவிட வருமுன் காப்போம்  என்கிற தத்துவத்தை கைக்கொள்வோமானால் எழிதில் வெற்றியடையலாம் என்பது சான்றோர் வாக்கு. "சுத்தம் ஈமானில் பாதி" என்று இஸ்லாம் மதத்தில் கூறப்பட்டுள்ளது. சுத்தமான வாழ்வு சுகம் தரும் என்பதுடன், "இயற்கையை அதிகமாக நிந்திக்க வைத்ததன் பிரதிபலனே நோய்" என்று ஹோலி பல்லோ என்பவரின் கூற்றாகவும் உள்ளது.

கடந்த ஓரிரு வருடம் முதற்கொண்டு இன்றுவரையிலும் எங்குபார்த்தாலும் "டெங்கு...., டெங்கு...." என்கிற பேச்சு நாட்டின் ஜனாதிபதி தொடக்கம் சாதாரண பொதுமக்கள் வரையிலும் கூட்டங்களும், குழுக்களும், செயலணிகளும், பரிசோதனைகளும், ஊர்வலங்களும், சுவரொட்டிகளும், விழிப்புணர்வுக் கருத்தரங்குகளும் என பல்வேறு செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டுதான் வருகின்றன. இதன் மூலம் சற்றுக் குறைந்திருந்தாலும் மக்களின் நாளாந்த வாழ்வில் ஓர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் வகையிலாக இந்த டெங்குப்பிரச்சினை அமைந்துள்ளதைப் பார்க்கிறபோது மிகவும் பரிதாபகரமான நிலையில் மனிதர்களாகிய நாம் நடந்து கொண்டிருக்கின்றோமே எனத் எண்ணணத்தோன்றுகிறது. ஆம், மிருகங்கள், பறவைகள் போன்ற ஜந்துக்களுக்கும் பேசச் தெரியுமென்றால் எம்மை ஏழனம் செய்து கொண்டே இருக்கும். நல்லகாலம் அவற்றுக்கு பேசத்தெரியாது!

இதுவரையில் பல ஆயிரக்கணக்கானவர்களையும் தாக்கி பலரை இறப்புக்குள்ளாக்கிய இந்த டெங்கு நோயின் தாக்கம் மனிதரின் அலட்சியமற்ற போக்கினால்தான் ஏற்படுகின்றது என்பதை யாரும் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. நாமேதான் நமக்கு எதிரியாகி பரிதாபகரமாக உயிரையும் மாய்க்கும் நிலைக்கு ஆளாக்கப்படுகின்றோம். அல்லது உட்படுத்தப்படுகின்றோம். எப்படியென்றா யோசிக்கின்றீர்கள்? 

சாதாரணமாக நம் எல்லோருக்கும் தெரியும் நாட்டின் அபிவிருத்தி என்ற பெயரில் கிராமங்கள் தொடக்கம் பெரிய நகரங்கள் வரையும் மாடிக்குமேல் மாடியும், நவீன கலையுணர்வுடன்கூடிய பல்வேறு பல்தேவைக் கட்டிடங்களும், வீதிகள் அகலமாக்கப்பட்டு கார்பட் போடப்பட்டு இன்று நாடுமுழுவதும் எதிர்கால இலங்கையின் ஒளிர்விடுகைகள் மேம்படுத்தப்பட்டு ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக்கும் மகிந்த சிந்தனையின் அடிப்படையில் விருத்தியாக்கப்பட்டும் வருகின்றன. பாராட்டுக்குரியதான விடயமாகக் கொள்ளப்பட்டாலும் சரியான திட்டமிடல்களோ, அமைக்கப்படுகின்ற பெரிய கட்டிடங்களிலிருந்து வெளியாகின்ற கழிவுகளை அப்புறப்படுத்தவோ, மழைகாலம் பெய்கின்ற மழைநீர் அல்லது வெள்ளம் வழிந்தோடக்கூடியவாறு வடிகான்களோ அல்லது அவைபற்றிய எவ்விதமான அசிரத்தையோ எடுக்காது  அபிவிருத்தி என்ற பேரில் இவையனைத்தும் நடைபெற்று வருகின்றன. 


உதாரணமாக பெரியதோர் கட்டிடம் கட்டப்படுகின்றது. மக்களின் அன்றாட அலுவல்களைப் கவனிப்பதற்காக காரியாலயங்கள், அறைகள், தங்குமிடங்கள், சமையலறைகள், குளிப்பதற்கான அறைகள், கழிவறைகள், உண்பதற்கான அறைகள், உலாவும் அறைகள், மக்கள் இளைப்பாறுவதற்கான காம்பறாக்கள் என கட்டிடம் அமைக்கப்பட்டதன் பின்னர் அக்கட்டிடத்தை சுற்றிவர மதில்களும் அமைக்கப்பட்டு, கழிவுநீர் வழிதோடுவதற்குரிய வடிகான்களும் அமைக்கப்படுகின்றன.  திறப்புவிழாக்களும் நடைபெற்றதன்பின் எல்லாமே முடிந்துவிட்டது. கொந்தராத்துக்காரரின் கையில் பணம் கிடைத்துவிடுகிறது. முடிந்தகையுடன் மக்கள் பாவனைக்கு விடப்படுகிறது கட்டிடம். இப்போதுதான் பிரச்சினையே ஆரம்பிக்கிறது. 

அங்கு உருவாகின்ற கழிவுகள் வெளியே செல்லாது கட்டிடத்தைச் சுற்றி அங்கு கட்டப்பட்டுள்ள வடிகானில் தேங்கி நிற்கிறது. நாள் செல்லச் செல்ல வீசுகிறது வாசம். மக்கள் மூக்கைப் பொத்திக் கொண்டு காரியமாற்றுகின்றார்கள். அதிகாரிகளுக்கு அடைக்கப்பட்ட ‘யுஊ’ அறைகள். அவர்களுக:கு அங்குள்ள தூர்நாற்றம தெரிவதில்லை. அப்படித்தான் தெரிந்தாலும் கண்டுகொள்ளவும் மாட்டார்கள். ஏனெனில் அங்குள்ள வடிகான்களுக்கு மூடிகள் போட்டு மூடப்பட்டுள்ளது. இப்போது கூறுங்கள் டெங்கு எங்குதான் உருவாகின்றது. "சுத்தம் சுகம் தரும்" என்பார்கள் சுத்தத்தைப் பற்றியும், நோய்த்தாக்கத்தைப் பற்றியும் வாய்கிழிய பேசியும் என்னபயன். திட்டமிட்டவாறு மக்களும், அதிகாரிகளும் நாட்டின் நலனிலும், அபிவிருத்தியிலும் அன்புகொண்டு நடந்து கொள்வதில்தான் சிக்கலே ஏற்படுகிறது.  

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி தலைமையில் செயலணிகள், பொலிஸ் நிலையங்களில் விசேட பிரிவுகள், மாகாணங்களிலிருந்து பிரசேத சபை வரை மேற்பார்வைகளும், வேலைத்திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எப்படித்தான் குழுக்கள் அமைத்தாலும் எல்லாமே ஆமைவேகத்தில்தான். ஒருவருக்கு நோய்த்தாக்கம் ஏற்பட்டு அவர் இறந்துவிட்டால் அந்த வாரம் முழுவதும் அப்பிரதேசம் சுத்தமாக்கப்படும் பின்னர் மறந்துவிட்டால் மீண்டும் கோகிலா நிலைமைதான். 

இதற்கு ஒரு உதாரணம் கூறுவேன். அண்மையில் எனது நண்பர் ஒருவரின் கடைக்கு முன்னால் உரையாடிக் கொண்டிருந்தபோது அவர் என்னிடம் காட்டிய விடயங்கள் ஆச்சரியமாகவே இருந்தது. வீதியின் இருமருங்கிலும் வடிகான்கள் கட்டப்பட்டு அழகான முறையில் மேல்மூடிகளும் போடப்பட்டுள்ளன. இவை போடப்பட்டு பல மாதங்களாகியும் ஆங்காங்கே இன்னும் முடிந்தும் முடியாததுமாக காட்சி தருகின்ற நிலைவேறு அவரது கடைக்கு முன்பாக உள்ள தேநீர் கடையிலிருந்து வெளியாகின்ற கழிவுநீர் தொடக்கம் அவர்களது குப்பைகளும் அந்த வடிகானின் உள்ளேதான் போடப்படுகின்ற ஒரு நிலைமையை அவதானித்தோம். இன்று வடிகான்கள் குப்பைத் தொட்டில்களாக பாவிக்கப்படுவதை நேரிடையாக காண்கின்றோம்.

என்ன வடிகானினுள்ளே ஆமைகளும், தவளைகளும், எலிகளும், கூடவே நுளம்புகளும் ஈசல்கள் போல் அங்கே உலாவுகின்றன. எப்படி ஐயா டெங்கை ஒழிப்பது. எனவேதான் எந்தவிதமான அபிவிருத்தியின் போதும் அதிலிருந்து உச்சப்பயனை அடைதல் வேண்டும் என்பார்கள். உச்சப்பயன் இதுதானோ என எண்ணத்தோன்றுகிறது. அதாவது டெங்கு அல்லது சுற்றாடல் சார்பான நோய்க்கு ஆட்பட்டு இறப்பதைத்தானோ உச்சப் பயனடைதல் என்கிறார்களோ தெரியாது. குறிப்பாக அரச நிறுவனங்களில் அவற்றின் வெளிப்பகுதிகள் அல்லது புறம்பான பிரதேசங்கள் கழிவுகள் நிறைந்தாகவே காணப்படுகிறது. உரியவர்கள் உரிய நேரத்தில் அவற்றைக் கவனிப்பதில் தவறிவிடுகின்றார்கள். அல்லது கீழ்மட்ட ஊழியர்கள் அவற்றினை அப்புறப்படுத்துவதில் அசிரத்தை காட்டுகின்ற ஒரு நிலையும் காணப்படுகின்றது.

நாட்டிலுள்ள பிரதேச சபைகள், பொதுச்சுகாதார பரிசோதகர்கள் ஊக்கத்துடன் கருமமாற்றுகின்றனர். இது அண்மைக்காலத்தில் டெங்கை பரப்புகின்ற ஒரு சிறிய நுளம்பின் பயத்தினால் அரசும் மக்களும் திணறி அடித்துக் கொண்டு அதனை ஒழிப்பதில் தங்களது பணத்தையும் நேரத்தையும் ஒதுக்கி வேலை செய்கின்றனர். கியூபாவிலிருந்து மாற்றுக் கிரிமிகள் கொண்டுவந்து போட்டார்கள். பலகோடிகள் செலவு செய்து. ஓரளவு வெற்றி என்று அரசு கூறினாலும் வெற்றியாக்குவதில் மக்களின் கைகளிலும், உளப்பாங்கிலும்தான் உண்டு.


ஏனெனில் இன்று வீதியில் குப்பை கொட்டுபவர்களையும், டெங்குநோய் பரப்பும் செயலுக்கு ஊக்குவிப்பவர்கள் எனத் தெரியவரும் நபர்களையும் கைது செய்து சட்டநடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுவொரு நல்ல விடயம். நாட்டின் பொதுச் சுகாதாரத்தையும், சுற்றாடலையும் மாசுபடுத்தி தன்னையும், மற்றவரையும், ஏன் கிராமத்தையும், நாட்டையும் பாழாக்குபவர்களையும், நோய் பரவ உடந்தையாய் இருப்பவர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுப்பது நல்லவிடயம்தான்.

ஆனால், நாம் மேலே கூறிய விடயங்கள் இதனுள் மறைபட்டே போகிறதே. இவர்களை யார் கைது செய்வது! இவர்கள் மீதான நடவடிக்கை எடுப்பது யார். என்பதுதான் தெரியவில்லை. இன்று வைத்திய சாலைகள் மிகவும் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்கள் என்பதற்காகவே மக்கள் சுகநலத்தில் பற்றுவைத்து வைத்தியசாலைகளை நாடுகின்றனர். ஆனால், வைத்தியசாலைகளின் உள்ளே சில இடங்களில் நீர் ஒழிகிக்கொண்டே இருக்கும். அந்த நீரும், கழிவுநிரும் அங்குள்ள வடிகானில் சென்று வைத்திய சாலையின் எல்லையில் முடிய நிலையிலுள்ள வடிகானுக்குள் எல்லாம் ஒன்று சேர்ந்து அங்கே பொதுச் சுகாதாரத்திற்கு கேடுவிளைவிக்கும் பல்வேறு நோய்களுக்குரிய ஜந்துக்கள் உருவாக்கும் இடமாக மாறுகின்றன.

எனவே, இந்நிலைக்கு காரணமாக அமைகின்றவர்கள் யார்? கடந்த வருடம் பதுளையில் ஒருவைத்தியரே இந்நோயினால் இறந்துள்ளார். வைத்தியருக்கே இந்நிலை என்றால் சாதாரண பொதுமகனின் நிலை அப்பப்பா? எண்ணவே முடியாதுள்ளது.


பிரதேசத்தின் சௌபாக்கிய நிலைமைக்கு இட்டுச் செல்பவர்கள் பலர். அவர்களில் பிரதேச சபையினரும், பிரதேச சுகாதார அதிகாரிகளும் முக்கியமானவர்களாக காணப்படுவர். இவர்கள் பிரதேசத்தினை சுத்தமாக வைத்திருக்க பல்வேறு நடவடிக்கைகளிலும், செயற்பாடுகளிலும் ஈடுபடுவர். இருப்பினும் அனைத்தையும் பார்க்கவோ, செயற்படுத்தவோ முடியாது. இவற்றுக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குகின்ற போதுதான் நடைமுறைச் சாத்தியமுள்ளதாக அமையும். ஆனால் மக்களின் ஒத்துழைப்புக் கிடைக்கின்றபோது உரிய அதிகாரிகளின் ஒத்துழைப்பின்மை, பாராமுகம் காட்டுகின்றபோது எவ்வாறு பலன் கிடைக்கும்.  அனைவரும் ஒத்துழைப்பு நல்குதல் வேண்டிய காலத்தில் அல்லவா இருக்கிறோம். அசமந்தப் போக்குக்கு உட்பட்டால் விபரீதமான விளைவை சந்திக்கநேரிடும். 

டெங்கு ஒழிப்புக்கு மாதம் என்றும், நாட்கள் என்றும், தேசிய ஒழிப்பு வாரம் என்றெல்லாம் கூறினார்கள். பாடசாலைகளில் குப்பைக் கழிவுகள் மூலைகளில் குவிகின்றன. வீதியின் சந்தியில் குப்பை கொட்டப்படுகிறது. இருப்பார் அற்ற தெருவிலுள்ள வெற்றுக் காணியில் கொட்டப்படுகிறது குப்பை. கேட்டால் தெரியாது. அப்படியானால் அரசின் திட்டங்களும், செயற்பாடுகளும் வெறும் வேஸ்ட். அரசு பிரகடனப்படுத்திய இந்நாட்களில்  எத்தனை வீதமானோர் வீட்டுக்கழிவுகளை வீதியில் வீசாமல் (ஒருநாள் விட்டு ஒருநாள் வருகின்ற) குப்பை வண்டியில் போடுவதற்கு சேமித்து வைத்துள்ளார்கள்.


வீட்டில் குப்பைக் கழிவுகள் போடுவதற்கு இடமில்லை. மாடிவீட்டில் வசிப்பவர்கள் இராக்காலங்களில் மேலே இருந்து யாரும் இல்லாத சந்தர்ப்பத்தில் வீசிவிடுகின்றனர். தெருச்சந்தியில் குப்பைத்தொட்டி நிறைந்திருந்தாலும் பரவாயில்லை என்று மெதுவாக வைத்து விடுவோம் என்று நினைப்பவர்கள் எத்தனைபேர்? ஆதலால்தான் சிங்கப்பூரின் முன்னேற்றத்திற்கு அந்த மக்கள் கொடுக்கின்ற கௌரவம்தான் அந்தநாடு மிகவும் சுத்தமாக காணப்படுகிறது. நாமோ எந்த இடம் என்றாலும் சரி யாரையும் எதிர்பார்ப்பதில்லை குப்பை பையை வீசி எறிந்து விடுகின்றோம். நாய், பூனை, பறவைகளும் அவற்றை கிலாகித்து பிரதேசத்தையே நாற்றமெடுக்கச் செய்கிறது. அப்படியானால் எப்படி நம் நாடு முன்னேற்றம் அடைவது?

தொலைக்காட்சியில் ஒரு விளம்பரம் வீட்டில் பின்புறத்தில் யோகட் போன்ற கழிவுகளை சிறுவர்கள் மண்ணுள் போட்டு மூடிவிடுகின்றனர். பிளாஸ்ரிக் பொருட்கள் இறப்பதற்கு நீண்ட காலம் எடுக்கும். அப்படி இருந்தும் மீள்சுழற்சி செய்வதற்கு அவற்றை வேறாக தெரிந்தெடுத்து அதற்கென்று தனியான நிறத்தில் குப்பைத்தொட்டிகள் பல இடங்களிலும் வைக்கப்பட்டுள்ள நிலையில் பிளாஸ்திரிக் கழிவுகளை மடுவினுள் போடுவதால் மண்ணல்லவா கெட்டுவிடப்போகிறது. அண்மையில் கரையொதுங்கிய திமிங்கிலம் ஒன்றின் வயிற்றை வெட்டிப் பார்த்தபோது சுமார் 50 கிலோ எடைகொண்ட பிளாஸ்ரிக் கழிவுகள் அதன் உடலில் இருந்துள்ளது. பார்த்தீர்களா? இன்று கடலும் குப்பைத் தொட்டியாகிவிட்டது. 

டெங்குக் காய்ச்சல் ஈடிஸ் ஏஜிட்டி என்ற நுளம்பு இனத்தினால் பரப்பப்படுகின்றது. இவ்வினம் தூய்மையான நீரில்தான் முட்டையிடும். சிரட்டை, வெறும் தகரப்பேணி, போத்தல், மட்டை, தங்கியுள்ள பொலித்தீன் பைகள் போன்ற வெற்றுப் பொருட்கள் அல்லது கழிவுப் பொருட்களின்மீது தங்குகின்ற சொற்ப நீரே போதும் இந்நுளம்புகள் உருவாகுவதற்கு. மழைபெய்து சில நாட்களின் பின்னர் இவை ஆயிரக்கணக்கில் பெருக்கமெடுத்து மக்களின்மீது துயரை ஏற்படுத்துகிறது. பழைய பொருட்களை அழிப்பதனால் இவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்தாலும் மேலே கூறப்பட்ட பொதுவான காரணங்கள் இவற்றின் பெருக்கத்திற்கும் உதவுவனவாக அமைகின்றதல்லவா? 

பொதுவாகவே மனிதனின் பல்வேறு நடவடிக்கைகளும் சூழலிற் பாதிப்புக்களை ஏற்படுத்தியே விடுகின்றன. நாட்டின் அபிவிருத்திகள் சூழலில் நல்லவிதமான விளைவுகளைத் தந்தாலும் சில வேளைகளில் அவை தீய விளைவுகளையே ஏற்படுத்திவிடும். எனவேதான் நமது சூழலை பாதுகாக்குகின்ற பற்றுருதி பொதுமக்கள் அனைவருக்கும் உண்டு. ஆதலால்தான் சூழலின் பாதுகாவலர்களாக பொதுமக்கள் தொழிற்படவேண்டும்.

அப்போதுதான் இவ்வாறான நோய்களை பரப்புகின்ற விடயங்களைக் கவனித்து உரிய அதிகாரிகளுக்கு எத்திவைப்பதும், அவற்றை அப்புறப்படுத்தி நம்மையும் நமது சூழலையும் பாதுகாக்கின்ற பணியினை ஒழுங்குமுறையில் கண்காணித்து பேணி வருகின்றபோது நாட்டிலிருந்து டெங்குபோன்ற சுகாதார கேட்டினால் பரவுகின்ற அனைத்துவகை நோய்களையும் விரட்ட மக்களாகிய நாம்தான் விழிப்புணர்வுடன் நாட்டில் பற்றுவைத்து காரியமாற்றுதல் வேண்டும். அப்போதுதான் இதனை ஒழித்துக் கட்டலாம்.  

எஸ். எல். மன்சூர் (கல்விமானி)
அட்டாளைச்சேனை
தென்கிழக்கு துருவம் செய்தியாளர்

0 comments:

Post a Comment