இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் ஏற்கனவே இழந்து விட்டது. அடுத்து 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஒரிசா மாநிலம் கட்டாக்கில் நேற்று பகல்-இரவு ஆட்டமாக நடந்தது.
டோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் இந்திய அணியின் தலைவர் பொறுப்பை ஏற்றுள்ள ஷேவாக், நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தார். இதைத் தொடர்ந்து லென்டில் சிமோன்சும், அட்ரியன் பரத்தும் வெஸ்ட் மேற்கிந்திய தீவுகள் இன்னிங்சை தொடங்கினார்கள்.
இந்தியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளர்கள், மேற்கிந்திய தீவுகளின் தொடக்க ஆட்டக்காரர்களை நீண்ட நேரம் நிலைக்கவிடவில்லை. பரத் (17 ஓட்டங்கள், 13 பந்து, 3 பவுண்டரி), வினய்குமாரின் பந்து வீச்சில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சாமுவேல்ஸ் (10 ஓட்டங்கள், 11 பந்து), வருண் ஆரோனின் பந்தில் போல்டானார். தொடர்ந்து லென்டில் சிமோன்ஸ் (19 ஓட்டங்கள், 30 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்), உமேஷ் யாதவின் பந்து வீச்சில் ஸ்டம்பு சிதற வீழ்ந்தார். அனுபவம் இல்லாத இந்திய இளம் பந்து வீச்சாளர்கள் 52 ஓட்டங்களுக்குள் 3 பேரை வெளியேற்றியதால் மேற்கிந்திய தீவுகள் நெருக்கடிக்குள்ளானது.
இந்த சூழலில் 4ஆவது விக்கெட்டுக்கு இணைந்த டேரன் பிராவோவும், டான்ஸா ஹிதாயத்தும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்த ஜோடியின் ஆட்டத்தை பார்த்த போது அந்த அணி 250 ஓட்டங்களை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஓட்ட எண்ணிக்கை 127 ஓட்டங்களை எட்டிய போது ஹியாத் 31 ஓட்டங்களில் (54 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டமிழந்தார். இந்த கூட்டணி 4-வது விக்கெட்டுக்கு 75 ஓட்டங்கள் எடுத்தமை குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் எதிரணி ஓட்டவேகத்தை முற்றிலும் கட்டுப்படுத்தினர். தனது 6-வது அரைசதத்தை கடந்திருந்த டேரன் பிராவோ 60 ஓட்டங்களில் (74 பந்து, 6 பவுண்டரி), சுரேஷ் ரெய்னாவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் மேற்கிந்திய அணியின் விக்கெட்டுகள் துரிதமாக சரிந்தன. எதிர்பார்க்கப்பட்ட அதிரடி நாயகன் கீரன் பொல்லார்ட்டும் (13 ஓட்டங்கள், 33 பந்து) ஜொலிக்கவில்லை.
இறுதியில் ஆந்த்ரே ரஸ்செலின் சிறிய அதிரடியின் (22 ஓட்டங்கள், 20 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) உதவியுடன் 200 ஓட்டங்களை கடந்தது மேற்கிந்திய அணி. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில்மேற்கிந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 211 ஓட்டங்கள் எடுத்தது.
பின்னர் 212 ஓட்டங்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு ஆரம்பமே தடுமாற்றமாக இருந்தது. தொடக்க ஆட்டக்காரர் பார்த்தீவ் பட்டேல் (12 ஓட்டங்கள், 13 பந்து, 2 பவுண்டரி), அடுத்து வந்த கவுதம் கம்பீர் (4 ஓட்டங்கள்), விராட் கோக்லி (3 ஓட்டங்கள்), சுரேஷ் ரெய்னா (5 ஓட்டங்கள்) ஆகியோர் வரிசையாக ஆட்டமிழந்தனர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரும், அணித் தலைவருமான ஷேவாக்குக்கு (20 ஓட்டங்கள், 29 பந்து, 3 பவுண்டரி), ரஸ்செலின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
59 ஓட்டங்களுக்குள் 5 முன்னணி வீரர்களால் ஆட்டமிழந்து இந்திய அணி தடுமாறியது. இதைத் தொடர்ந்து 6-வது விக்கெட்டுக்கு ரோகித் ஷர்மாவும், ரவீந்திர ஜடேஜாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஓட்ட எண்ணிக்கை 142 ஓட்டங்களை எட்டிய போது, ரவீந்திர ஜடேஜா (38 ஓட்டங்கள், 62 பந்து, 3 பவுண்டரி) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அஸ்வின் (6 ஓட்டங்கள்) ஆட்டமிழந்தார்.
இருப்பினும் மறுமுனையில் அரைசதத்தை கடந்து ரோகித் ஷர்மா களத்தில் நின்ரோகித் ஷர்மா (72 ஓட்டங்கள், 99 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழந்ததால் திடீர் திருப்பம் ஏற்பட்டது. வெற்றி யாருக்கு என்பது மதில் மீது பூனையானது. ரோகித்தை தொடர்ந்து வினய்குமாரும் (18 ரன்) ஆட்டமிழந்தார்.
இறுதி விக்கெட்டுக்கு உமேஷ் யாதவ், வருண் ஆரோன் ஆகிய பவுலர்கள் ஜோடி சேர்ந்த போது, இந்தியாவின் வெற்றிக்கு 11 ஓட்டங்கள் தேவைப்பட்டன. ஆனால் 10-வது விக்கெட் ஜோடியான வருண் ஆரோன், உமேஷ் யாதவ் ஆகியோர் 49-வது ஓவரில் தங்களது பங்குக்கு தலா ஒரு பவுண்டரி பெற, இந்திய அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா 48.5 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 213 ஓட்டங்கள் பெற்று ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உமேஷ் யாதவ், வருண்ஆரோன் தலா 6 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர். இந்திய மண்ணில் இந்திய அணி தொடர்ச்சியாக பெற்ற 10-வது வெற்றி இதுவாகும். ரோகித் ஷர்மா ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது ஒரு நாள் போட்டி வருகிற 2 ஆம் திகதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது.


0 comments:
Post a Comment