Friday, November 11, 2011

அழகான பிச்சைக்காரி


எப்போதாவது ஒரு நாள்தான்
அந்த வீதிகளில்
அவள் யாசகம் கேட்டு
வருவாள்

தண்ணி நிரம்பிய
வெள்ளைக் கோப்பையில்
வந்தமர்ந்த
நிலாத் தூறல் போல
நல்ல வடிவான
வட்ட முகம்

பிச்சைக்காரி என்றால்
ஊத்தைப் புடவைதான் என்றிருந்த
எனக்குள்ளான படிமத்தை
உடைத்து எறிந்தவள்
அந்த அழகான பிச்சைக்காரி

அழகாய் உடுத்தி
அம்சமாய் வருகிற
அழகான யாசகி அவளை
வாயால் வீணி வடியப் பார்க்கும்
கடைத் தெரு மாந்தர்கள்

இடையிடையே
குழந்தை ஒன்றையும்
சுமந்து வருகிற
அவளுக்காய்
அந்த வீதியில் பரிதாபப்படுவோர்
யாருமில்லை

விரல் உரசி
ஒன்றுக்கு பத்து ரூபாய்
கொடுக்கும்
சில விழிகளின்
விரசமான
மோக விண்ணப்பங்களில்
அந்த அழகான பிச்சைக்காரி
கூனிக் குறுகிப் போகிறாள்

 -எஸ்.ஜனூஸ்-

0 comments:

Post a Comment