Tuesday, December 20, 2011

ஐ.தே.க. தலைமையகம் மீது தாக்குதல்; 16 போ் கைது


ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாக பதவிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதன்போது ரணில் விக்கிரமசிங்க மீண்டும் கட்சியின் தலைவராக தெரிவானார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கரு ஜெயசூரியவுக்கு குறைந்தளவான ஆதரவே கிடைத்தது. இதனையடுத்து கரு ஜெயசூரிய மற்றும் பிரதிதலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கு ஆதரவானவர்கள் ஸ்ரீகோத்தா தலைமையகம் மீது தாக்குதலை நடத்தினர். 

ஐக்கிய தேசியக் கட்சியின் தென் மாகாண சபை உறுப்பினர், சட்டத்தரணி மைத்திரி குணரத்ன உள்ளிட்ட 16 பேர் மிரிஹான பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களை பொலிஸார் ஜனவரி 02 வரை விளக்கமறியலில் வைத்துள்ளனர். 

தாக்குதல் நடத்தியவர்களில் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக செயற்பட்டு வந்த தென்மாகாண சபை உறுப்பினர் மைத்திரி குணரட்னவும் அடங்குகிறார். பிட்டகோட்டேயில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்திற்குள் அத்துமீறிப் பிரவேசித்து அதற்கு சேதம் ஏற்படுத்தியதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இதேவேளை, கட்சியின் யாப்புக்கு சவால் விடுக்கும் வகையில் பலவந்தமாக பதவிகளை பெற்று கொள்ள எவரேனும் செயற்படுவாராயின் அது பயங்கரவாத நடவடிக்கை என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.






0 comments:

Post a Comment