பிரிஸ்பனில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2ஆம் நாளான இன்று அவுஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 154 ஓட்டங்கள் எடுத்துள்ளது. முன்னதாக நியூஸிலந்து அணி முதல் இன்னிங்சில் 295 ஓட்டங்ளுக்குச் சுருண்டது. டேனியல் விட்டோரி 96 ஓட்டங்கள் எடுத்து துரதிர்ஷ்டவசமாக சதத்தைக் கோட்டைவிட்டு ரன் அவுட்டானார். அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நேதன் லயன் 69 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
ரிக்கி பொண்டிங் 67 ஓட்டங்களுடன் விளையாடி வருகிறார். அவருடன் மைக்கல் கிளார்க் 28 ஓட்டங்கள் எடுத்து விளையாடி வருகிறார். பொண்டிங் 57ஆவது அரைசதத்தை எடுத்த அதே வேளையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 12,500 ஓட்டங்களைக் கடந்துள்ளார்.
பொண்டிங்கிற்கு இன்று நடுவரின் கடாட்சம் இருந்தது. ஓட்டம் எடுக்கும் முன்னர் தீவிர எல்பி. முறையீட்டிலிருந்து தப்பினார். அது ஆட்டமிழப்புதான். ஆனால் கொடுக்கப்படவில்லை. அதன் பிறகு ஓட்டம் எடுக்கும் முன்னரே உஸ்மான் கவாஜாவினால் திருப்பி அனுப்பட்டதால் ரன்னர் முனையில் ரன் அவுட் ஆகியிருப்பார் பொண்டிங், ஆனால் நியுசிலாந்து கோட்டை விட்டது.
மைக்கல் கிளார்க் 23 ஓட்டங்களாக இருந்த போது பிரேஸ்வெல் பந்தை ஸ்டம்புக்குள் விட்டுக் கொண்டார். ஆனால் 3வது நடுவர் நோ-போல் என்று அழைத்ததால் பிழைத்தார். இன்று காலை நியூஸீலாந்து தன் இன்னிங்ஸைத் தொடர்ந்தது. விட்டோரியும் பிரௌன்லீயும் பலமாகச் சென்றனர். இருவரும் இணைந்து 6வது விக்கெட்டுக்காக 158 ஓட்டங்களைச் சேர்த்தனர்.
96 ஓட்டங்கள் எடுத்து தனது 7ஆவது டெஸ்ட் சதத்தையும், ஆஸி.க்கு எதிராக முதல் சதத்தையும் எதிர்நோக்கிய விட்டோரி மிட் ஆஃபில் தட்டி விட்டு ஓடிவந்தார். அது ஒரு தற்கொலை முயற்சி மைக் ஹஸி நேராக ஸ்டம்பை அடித்தார் விட்டோரி டைவ் அடித்தும் பயனில்லாமல் போனது. பிரௌன்லீ 77 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசியில் சவுதீ 17 ஓட்டங்கள் எடுக்க நியூஸீலாந்து 295 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டையும் இழந்தது.
பீட்டர் சிடில், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஓஃப் ஸ்பின்னர் லயன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவுஸ்திரேலியா களமிறங்கியபோது அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த அதிரடிப் புலியான துவக்க வீரர் டேவிட் வோர்னர் 3 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது சவுதீயின் அபாரமான பவுன்சர் அவரது கை கிளவுசைத் தொட்டு பிடி ஆனது. வோர்னரால் அந்தப் பந்தை விளையாட முடியவில்லை.
மற்றொரு இடது கை துவக்க வீரர் பிலிப் ஹியூஜ் 10 ஓட்டங்கள் எடுத்த நிலையில் மார்டின் வீசிய பந்து அவரை நேராக்கியது பந்து எட்ஜ் எடுத்துக் கொண்டு கல்லியில் குப்திலிடம் பிடி ஆனது. அபாரமான பந்து. 66 ஓட்டங்களை கவஜாவும், பொண்டிங்கும் சேர்த்தனர். அப்போது 38 ஓட்டங்கள் எடுத்த கவாஜா சற்றே தயங்கிய பிறகு ஓடியதால் ரன் அவுட் ஆனார்.
பொண்டிங்கும் கிளார்க்கும் இணைந்து இதுவரை 63 ஓட்டங்களை சேர்த்துள்ளனர். பொண்டிங் 11 பவுண்டரிகளை விளாசினார். நாளை மூன்றாவது நாளாகும்.


0 comments:
Post a Comment