Sunday, December 11, 2011

இந்தியா 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது.

இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சேவாக், அஸ்வின், வினய்குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவர்களுக்குப் பதிலாக ரகானே, இர்பான் பதான், மனோஜ் திவாரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் காம்பீர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.தொடக்கமே இந்திய அணிக்கு பலத்த அடியாக அமைந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் முதல் ஓவரை வீசிய ரோச்சின் 2 வது பந்தில் ரகானே எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். தொடர்ந்து வீசிய 3-வது பந்தில் பார்த்தீவ் படேல் ஸ்டம்புகளை பறிகொடுத்தார். இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து இந்தியா பரிதவித்தது. இதையடுத்து களமிறங்கிய திவாரி, காம்பீருடன் இணைந்தார். இருவரும் வெஸ்ட் இண்டீசின் பந்துவீச்சை பொறுமையாக கையாண்டது. அவ்வப்போது பவுண்டரிகளுக்கும் விரட்டியது.காம்பீர் 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மார்ட்டின் சுழலில் எல்பிடபிள்யூ ஆனார். அதன்பிறகு திவாரியுடன் விராட் கோக்லி ஜோடி சேர்ந்தார். இவ்விருவரும் வெஸ்ட் இண்டீசின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது.

திறமையாக விளையாடிய திவாரி ஒருநாள் போட்டியில் தனது முதல் அரை சதத்தை கடந்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய கோக்லியும் அரைசதத்தை கடந்தார்.நரேன் வீசிய 38 வது ஓவரின் 5-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டியதன் மூலம் 103 ரன்களை கடந்து  தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார் திவாரி. சதம் அடித்ததும் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ரிட்டையர்டு கட் முறையில் பெவிலியன் திரும்பினார். அவர் 126 பந்துகளை சந்தித்து 104 ரன்கள் எடுத்தார். அவருடைய அதிரடியில் 10 பவுண்டரிகளும் 1 சிக்சரும் அடங்கும்.

அவரைத்தொடர்ந்து ரோகித் சர்மா களமிறங்கினார். திறமையாக விளையாடிய கோக்லி 85 ரன்கள் எடுத்த நிலையில் மார்ட்டின் வீசிய பந்தை பவுண்டரிக்கு விரட்ட முயன்று சாமுவேல்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.அவரைத் தொடர்ந்து ரோகித் சர்மாவும் தனது பங்குக்கு 31 ரன்கள் எடுத்து நரேன் பந்தில் ஸ்டம்புகளை பறிகொடுத்தார். கடைசி பந்தில் 2 ரன் எடுக்க முயன்று மார்ட்டினால் ரன் அவுட் செய்யப்பட்டார் பதான்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் இந்திய அணி 267 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்தது. ரெய்னா 16 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ரோச், மார்ட்டின் 2 விக்கெட்டுகளும், நரேன் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

268 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 44.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 231 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


0 comments:

Post a Comment