Tuesday, December 20, 2011

8 உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நீடிப்பு


மட்டக்களப்பு மாநகரசபை உட்பட மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பிரதேசங்களில் உள்ள 8 உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலத்தை மேலும் ஒரு வருடகாலத்திற்கு நீடிக்க உள்ளதாக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் டாக்டர் நிஹால் ஜயசிங்க தெரிவித்தார். இந்நீடிப்பு உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவிற்கு உள்ள அதிகாரத்தின் மூலம் நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாநகரசபை உட்பட மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களில் உள்ள உள்ளுராட்சி சபைகளுக்கு கடந்த 2008 மார்ச் மாதம் தேர்தல் நடத்தப்பட்டது. இத்தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு போட்டியிடவில்லை. இதனால் அனைத்து சபைகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியிருந்தது. இதன் பதவிக்காலம் எதிர்வரும் 2012 மார்ச் 18ஆம் திகதி நிறைவடைவுள்ளது. ஆனால் இதற்கு தேர்தல்களை நடத்தாது அரசாங்கம் மேலும் ஒரு வருடகாலத்திற்கு இச்சபைகளின் ஆயுட்காலத்தை நீடித்துள்ளது. 

மட்டக்களப்பு மாவட்டத்திலுளள் எட்டு உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் 2013 மார்ச் 18ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மட்டக்களப்பு மாநகர சபை, ஏறாவூர்பற்று பிரதேச சபை, கோரளைப்பற்று பிரதேசசபை, கோரளைப்பற்று வடக்கு பிரதேசசபை, மண்முனை தெற்கு எருவில் பற்று பிரதேச சபை, மண்முனைப்பற்று பிரதேச சபை, மண்முனை மேற்கு பிரதேச சபை, மண்முனை தெற்கு பிரதேச சபை மற்றும் போரதீவுபற்று பிரதேச சபை ஆகியவற்றின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த நீடிப்பிற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை. இச்சபைகளுக்கு உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என பொதுநல வழக்கு ஒன்றை தாம் தாக்கல் செய்ய இருப்பதாக மட்டக்களப்பு வரியிறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment