Wednesday, December 07, 2011

ஜனசக்தி உதவியைப் பெற்றுக் கொள்ளும் வீராங்கனைகள்


தேசிய மட்ட விளையாட்டு வீரர்களை பாடசாலை மட்டத்திலிருந்தே போஷித்து வளர்ப்பதற்காகவும் ஊக்குவிப்பதற்காகவும் தற்போது மேற்கொண்டுவரும் முன்னெடுப்புக்களை தொடர்ந்து பேணும் வகையில் ஜனசக்தி இன்சூரன்ஸ் பி.எல்.சி. நிறுவனமானது, தனது அனுசரணையைப் பெற்றுவரும் மெய்வல்லுனர்களுள் இருவர் தமது இரண்டாம் நிலைக் கல்வியினை பூர்த்தி செய்வதற்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கு அண்மையில் முன்வந்துள்ளது. 

இரத்தினபுரி, பெர்கியுசன் பெண்கள் உயர்நிலைப் பாடசாலையைச் சேர்ந்த 19 வயதான இஷாரா சந்தீபனி தயானந்த மற்றும் யாழ்ப்பாணம், அளவெட்டி, அருணோதயா கல்லூரியைச் சேர்ந்த 19 வயதான எஸ்.தனுஜா ஆகியோரே ஜனசக்தியின் உதவியைப் பெற்றுக் கொள்ளும் வீராங்கனைகளாவர். இதற்கென பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலப்பகுதியில் இவ்விரு யுவதிகளும் மிகச் சிறப்பாக தமது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். 

2011ஆம் ஆண்டில் இஷாரா நிகழ்த்திய சாதனைகளுள், கனிஷ்ட தேசிய விளையாட்டு போட்டியின் போது 100 மீற்றர் தடை தாண்டல் போட்டியில் தங்கப் பதக்கத்தினை பெற்றுக் கொண்டமை மற்றும் தேசிய பாடசாலை விளையாட்டுக்கள் சம்பியன்ஷிப் போட்டியின் போது 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை பெற்றுக் கொண்டமை ஆகியனவும் உள்ளடங்குகின்றன. துடிப்புமிக்க விளையாட்டு வீராங்கனையும் உறுதிமிக்க யுவதியுமான இஷாரா, தனக்கு வழிகாட்டியாகவும் பக்கபலமாகவும் இருந்து வருகின்றமைக்காக தனது பெற்றோருக்கு நன்றி தெரிவித்தார்.


அவர் மேலும் கூறுகையில், “கடந்த மூன்று வருடங்களாக எனது திறமையில் நம்பிக்கை வைத்து, அவற்றை அங்கீகரித்தமைக்காகவும் எனது விளையாட்டு துறைசார் நடவடிக்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் எனக்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்காகவும் நான் ஜனசக்தி இன்சூரன்ஸ் பி.எல்.சி. நிறுவனத்திற்கு நன்றி கூறுகிறேன்” என்றார். தனது தாய்நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில், கனிஷ்ட மற்றும் இளைஞர் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளின் போது இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி தடைதாண்டல் மற்றும் அஞ்சலோட்டப் போட்டிகளில் கலந்து கொள்வதே இஷாராவின் பிரதான குறிக்கோளாகும். 

யாழ்ப்பாணம், அளவெட்டி பிரதேசத்தில் பிறந்து வளர்ந்த தனுஜாவின் கதையானது கடுமையான பின்னடைவுகளைக் கொண்டதாகவும் அதேநேரம், அனைத்து பிரச்சினைகளுக்கும் முகம்கொடுத்து சிறந்த வெற்றியை நிலைநாட்டியதாகவும் அமைந்துள்ளது. விவசாயிகளான பெற்றோருக்கு மகளாய்ப் பிறந்த தனுஜா, சின்னஞ் சிறு வயதான மூன்று வயதில் இருந்து மூன்று வருடங்களுக்கும் அதிகமான காலம் அகதி முகாமில் வாழ்ந்துள்ளார். ஒரு நீளம் பாய்தல் வீராங்கனையாக மிளிர வேண்டும் என்ற கனவினைக் கொண்டிருந்த இவர், தனது இலக்கை நோக்கி மனம் தளராது பயணித்தார். 

2003ஆம் ஆண்டு மாவட்ட ரீதியாக இடம்பெற்ற விளையாட்டுப் போட்டிகளின் போது 13 வயதிற்கு கீழ்ப்பட்டவர்களுக்கான பிரிவில் 02ஆம் இடத்திற்கு தெரிவு செய்யப்பட்டமையே இவரது வாழ்வில் திருப்பு முனையாக அமைந்தது. மன உறுதி மற்றும் பயிற்சி என்பவற்றின் காரணமாக, இரு வருடங்களின் பின்னர் 15 வயதிற்கு கீழ்ப்பட்டவர்களுக்கான உயரம் பாய்தல் போட்டி நிகழ்ச்சியில் தங்கப் பதக்கத்தை அவர் வெற்றி கொண்டார்.

அதன்பின்னர் எந்தவொரு பின்னடைவையும் அவர் சந்திக்கவில்லை. இன்று தனுஜா ஒரு விளையாட்டு நட்சத்திரம் என்ற புகழைப் பெற்றுத் திகழ்வது மட்டுமன்றி, மிக விரைவில் சர்வதேச மட்டத்தில் தனது நாட்டினை பிரதிநிதித்துவப் படுத்தக்கூடிய மிகச் சிறந்த உள்ளார்ந்த திறமையையும் அவர் கொண்டுள்ளார். உண்மையிலேயே, 2009இல் தனுஜா முதன் முதலாக கொழும்பில் பங்கேற்ற போட்டியின் போதே கோலூன்றிப் பாய்தலில் பாடசாலை மட்டத்திலான தேசிய சாதனை ஒன்றினை நிலைநாட்டி இருந்தார். 


சிரேஷ்ட தேசிய சம்பியன்ஷிப் போட்டிகளின் போது உயரம் பாய்தல் மற்றும் கோலூன்றிப் பாய்தல் போட்டிகளில் அவர் 03ஆம் இடத்தினை தட்டிச் சென்றதுடன், 2011 கனிஷ்ட தேசிய சம்பியன்ஷிப் போட்டிகளின் போது உயரம் பாய்தலில் 03ஆம் இடத்தினையும் கோலூன்றிப் பாய்தலில் 01ஆம் இடத்தினையும் வெற்றி கொண்டார். 

தான் பெற்றுக்கொண்ட சொந்த அடைவுகளில் மேலும் முன்னேறுவது குறித்தும், இலங்கையரால் நிகழ்த்தப்படும் புதிய தொரு தேசிய சாதனையை நிலைநாட்டுவது தொடர்பிலும் இந்த இளம் வீராங்கனை இப்போது தனது கவனத்தை செலுத்தியுள்ளார். அவரது இறுதி இலக்கு ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவம் செய்வதாக உள்ளது. 

தனது வெற்றியின் பின்னணியில் பக்கபலமாக இருந்தவர்களை அவர் நன்றியுணர்வுடன் நினைவு கூருகிறார். அவரை வளர்த்தெடுத்த பெற்றோர், குறிப்பாக அவர் விளையாடத் தொடங்கியதில் இருந்து அவருடனேயே இருக்கும் பயிற்சியாளரும் வழிகாட்டியுமான திரு. சித்தையா சுபாஸ்கரன் ஆகியோரை அவர் நன்றியுடன் நினைவு கூருகின்றார். 

ஜனசக்தி மெய்வல்லுனர் அனுசரணை செயற்றிட்டத்தின் இணைப்பாளரும் நிறுவனத்தின் நிதி மற்றும் திட்டமிடல் பொது முகாமையாளருமான பேர்டல் பின்ரோ ஜயவர்தன, இவ்விரு விளையாட்டு வீராங்கனைகளுக்கும் ஆதரவு வழங்குவதையிட்டு ஜனசக்தி பெருமிதமும் கௌரவமும் அடைகின்றது என்று கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், “இந்த மெய்வல்லுனர்கள் இருவரும் தம்மளவில் தேசத்தின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள். சரியான வழிகாட்டுதலும் பயிற்சியும் அவர்களுக்கு அளிக்கப்பட்டதன் ஊடாக, சர்வதேச போட்டிகளில் மேலும் சிறப்பாக தமது திறமையை வெளிப்படுத்தக் கூடிய ஆற்றலை அவர்கள் பெற்றுள்ளனர். அது, அவர்கள் வாழும் தாய்நாட்டுக்கு பெருமையைக் தேடித்தரவல்லது என்றார். 

மெய்வல்லுனர் அனுசரணை செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாகவே இவ்விரு வீராங்கனைகளும் ஜனசக்தியின் உதவியை பெறுகின்றனர். இந்த செயற்றிட்டத்தின் கீழ், வெளியிடங்களைச் சேர்ந்த மிகவும் திறமையான மாணவ மெய்வல்லுனர்கள் தமது தனிப்பட்ட திறமை வெளிப்பாடுகளின் அடிப்படையில் மாதாந்த அடிப்படையிலான அனுசரணை மற்றும் ஊக்குவிப்புக் கொடுப்பனவு போன்றவற்றையும், ஏதாவது ஒரு சர்வதேச போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டால் அவர்கள் குறிப்பிட்ட வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதற்கான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. 

இதற்கு மேலதிகமாக பயிற்சி வழிகாட்டுதல்கள், தொழில்நுட்ப ஆலோசனைகளையும் தமது இளம் தொழில்சார் திறமையை மேம்படுத்து¬வதற்கான ஒத்துழைப்பும் கிடைக்கப் பெறுகின்றது. அதுமாத்திரமன்றி, தேசிய மட்டத்திலான மெய்வல்லுனர்களான வேறு நான்கு பேருக்கு ஜனசக்தி நிறுவனம் தொழில்வாய்ப்பினையும் வழங்கியுள்ளது. 

0 comments:

Post a Comment