Saturday, December 31, 2011

வருடம் இறுதிநாள் இன்று; புதுவருடத்தை வரவேற்றுக் கொண்டாடலாமா?


(சம்யா) 
இந்தாண்டின் இறுதிநாள் இன்று என்பதனால் உலக மக்கள் அனைவரும் புத்தாண்டை எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். அதற்கு குறைவில்லாது இலங்கை மக்களும் நாளை (2012) பிறக்கப்போகும் புத்தாண்டை வரவேற்கக் காத்திருக்கின்றனர். அந்தவகையில் அரச மற்றும் அரசார்பற்ற அமைப்புக்களும், நிறுவனங்களும், தனியார் தொழிலகங்களும் தங்களது கடமையை புதுவருடப் பிறப்பன்று ஆரம்பிக்க இருக்கின்றனர். அதற்கான முஸ்தீபுகளில் நிறுவனங்களும், தனிப்பட்டோர்களின் அமைப்புக்களும் களை கட்டத் தொடங்கியுள்ளன.

இப்புதுவருடமானது கிறிஸ்து பிறப்பைக் காட்டினாலும் ஏனைய மதங்களில் உள்ளவர்களுக்கு இது புதுவருடம் அல்ல என்பதை நினைவிற் கொள்ளவேண்டும். ஆனாலும், அனைத்து விடயங்களுக்கும் பிறக்கப்போகும் புதுவருடத்தையே முன்னிறுத்தி ஆரம்பிப்பதனால்தான் அனைவரும் புதுவருடத்தை எதிர்பார்த்துள்ளனர். அதற்காக பலரும் பலவிதமான களியாட்ட நிகழ்வுகளில் பங்கேற்பர். சிறுவர்கள் விளையாட்டுக்களிலும், பட்டாசு கொழுத்துவதிலும் குறியாய் இருப்பர்.

தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் சித்திரை புதுவருடப் பிறப்பும், முஸ்லிம்களுக்கு முஹர்ரம் புதுவருடமுமாக இருப்பதனால் இவர்களில் கணிசமானோர் பங்குபற்றாது விட்டாலும் நிறுவனங்கள், தொழிலகங்கள், தொழில்புரிவோர் போன்றோர்கள் இதனை வரவேற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஏனெனில் எல்லோருக்கும் பொதுவான ஆண்டாக இது அமைவதால் இதனை ஏற்பதில் எவ்வித தவறும் இல்லை. அதேவேளை முஸ்லிம்கள் இந்நிகழ்வை வாழ்த்துக்கூறும் அளவுக்கு இது முஸ்லிம் மக்களுக்கான புதுவருடம் அல்ல என்பதை விளங்கிக் கொண்டு அதற்கேற்றவாராக தங்களது நாளாந்தக் கடமைகளை மேற்கொள்ளுமாறு உலமாக்கள் வேண்டிக் கொள்கின்றனர். 

0 comments:

Post a Comment