Tuesday, December 20, 2011

எகிப்தில் இராணுவத்துக்கு எதிராக பெண்கள் பேரணி


எகிப்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இராணுவத்தினர் மேற்கொள்ளும் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு பெண்கள் பேரணியொன்றை ஏற்பாடு செய்துள்ளனர். தலைநகர் கெய்ரோவில் இடம்பெற்ற பேரணியில் ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் கலந்துகொண்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு மற்றும் கண்ணீர் புகை குண்டு வீச்சு ஆகியவற்றை நடத்தினர். இதில் பலர் காயம் அடைந்தனர்.எகிப்தில், ராணுவ ஆட்சி உடனடியாக நீக்கப்பட வேண்டும் எனக் கோரி, தலைநகர் கெய்ரோவில் உள்ள தாரிர் சதுக்கத்தில் சிலர் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஒரு வாரமாக எகிப்தின் இராணுவ ஆட்சிக்கெதிராக மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுப்பட்டுள்ளனர். அவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் மிலேச்சத்தனமாக தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த பெண்கள்பேரணி இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இராணுவத்தினர் பெண்கள் மீதும் தாக்குதல் நடத்துவதாக பேரணியில் கலந்துகொண்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்நிலையில் தவறுதலாக இராணுவத்தினரினால் பெண்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அதற்கு தாம் மன்னிப்பு கோருவதாக எகிப்தின் இராணுவ ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை எகிப்து பொலிசார் மற்றும் இராணுவத்தினர் அநாவசியமாக அந்நாட்டு பெண்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்வதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலரி கிளின்டன் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment