Saturday, December 10, 2011

அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் இப்படியும் ஒரு பாடசாலை


(துருவம் அரசியல் செய்தியாளர்) 
அக்கரைப்பற்று கல்வி வலயம் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பொத்துவில் ஆகிய கல்விக் கோட்டங்களை உள்ளடக்கி சுமார் 50க்கும் மேற்பட்ட பாடசாலைகளை தன்னகத்தே கொண்டு இயங்கி வருகிறது. அட்டாளைச்சேனைக் கோட்டத்திலுள்ள பாலமுனைக் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு உயர்தரம் உள்ள ஒரே பாடசாலை மின்ஹாஜ் மகாவித்தியாலயமாகும். இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்ற ஊரின் பெயர் சொல்லும் பாடசாலையாக திகழ்கிறது. ஆனால் பரிதாபம் என்னவென்றால் இப்பாடசாலையில் போதியளவு மாணவர்களுக்கான கதிரை மேசைகள் இன்மை கல்வியை பெரிதும் பாதிக்கின்றது என அந்த ஊரின் ஆசிரியர் ஒருவர் துருவத்திடம் தெரிவித்தார்.

அதேவேளை இம்முறை க.பொ.த. சாதாரணதர மாணவர்களுக்கான பரீட்சை நிலையமாக இப்பாடசாலை தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அங்கு போதியளவு கதிரை மேசைகள் காரணமாக அந்நிலையத்திற்குப் பொறுப்பாக்கப்;பட்ட பரீட்சை மேற்பார்வையாளர்கள் பெரிதும் கஷ்டப்பட்டதை துருவத்திற்கு தெரியவந்தது. நிலைமைய நேரில் அவதானிக்கச் சென்றபோது உண்மையில் இதுவொரு பாடசாலைதானா என்கிற கேள்வி எம்முள் ஏற்பட்டது. நேற்றுடன் முடிவடைந்த சகல பாடசாலைகள் இன்றிலிருந்து எதிர்வரும் ஜனவரி 02ஆந் திகதிவரை மூடப்பட்டிருக்கும். ஆனால் இப்பாடசாலையோ எங்கு பார்த்தாலும் குப்பைக் கூளங்களாகவும், உடைந்த மேசை கதிரைகள், பிளாஸ்டிக் கதிரைகள், இரும்பு அலுமாரி என வகையரை இன்றி பாடசாலையின் ஓரங்களிலும், வெளியிலும் காணக்கூடியதாய் இருந்தது. 

மேலதிக கதிரை மேசைகளை தேடிய பரீட்சை மேற்பார்வையாளர்கள் உடனடியாக அண்மையிலுள்ள ஒரு பாடசாலையுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, அந்த அதிபரோ தம்மிடம் போதியளவு மேசை கதிரை இல்லையென்று கைவிரித்த நிலையில் பரீட்சார்த்திகளின் நன்மைகருதி பக்கத்தூரிலுள்ள ஒரு பாடசாலைக்குச் சென்று மிகவு கஷ்டத்தின் மத்தியில் ஏற்றிக் கொண்டு வந்தனர். இந்தனைக்கும் இப்பாடசாலையில் இரண்டு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உண்மையில் இடப்பற்றாக்குறை, தளபாடப் பற்றாக்குறையாக இருக்கின்ற பாடசாலைகளை தெரிவு செய்தவர்கள் யார் என்கிற கேள்விகளும் எழாமல் இல்லை. இத்தனைக்கும் அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் உயரதிகாரியா வலயக் கல்விப் பணிப்பாளரது சொந்த இடம் இந்தப் பாலமுனைதான். இருப்பினும் அண்மையில்தான் அவரும் நியமிக்கப்பட்டார். கடந்த காலங்களில் அக்கரைப்பற்று கல்வி வலயம் சுனாமியின் தாக்கத்திற்கு உட்பட்டு பலகோடிகளில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள போதிலும் இப்பாடசாலைக்கென எவ்வித அபிவிருத்திகளும் செய்யப்படவில்லை என்பதை அவ்வூர்வாசி ஒருவர் எம்மிடம் தெரிவித்தார்.

அதேவேளை இப்பிராந்தியத்தில் பலம் பொருந்திய அமைச்சர்களின் ஆதரவாளர்களும், இணைப்பாளர்களும் இந்த ஊரில் இருந்தும் அவர்களாவது இது பற்றி தம்முடைய அமைச்சர்களிடம் தெரிவித்து பல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டிருக்கலாம்.  இதேவேளை இப்பாடசாலைக்கு சமாந்தரமாக ஒரு பாடசாலை இதன் கிளையாக வேறொரு இடத்தில் அமைக்கப்பட்டாலும் அது ஆரம்பப் பாடசாலையாகவே காணப்படுகிறது. எதிர்வரும் ஆண்டிலிருந்து இப்பாடசாலையானது 1000 பாடசாலைக்குள் உள்வாங்கப்பட்டுள்ள நிலையில் இப்பாடசாலையின் அனைத்து வசதிகளும் இப்பாடசாலைக்கு வரலாம் என்று சொல்லப்பட்டாலும் இதுவரை காலமும் இப்பாடசாலைச் சமூகம் சிந்தனை செய்தது எதனை என்கிற கேள்விகளும் எழுகின்றன.

இன்றைய அரசு பலகோடிகளை செலவு செய்து அண்மைக்கிராமங்களிலுள்ள பலபாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள நிலையில் இப்பாடசாலையில் ஒரு மாடிக்கட்டிடமாகவது இல்லாமல் இருப்பது மிகப் பெரியதோர் கவலையைத் தோற்றியுள்ளது என பரீட்சை மேற்பார்வையாளர்களுள் ஒருவர் தெரிவித்தார். இவ்வாறான நிலையில் எமது கிராமப் பாடசாலைகள் இவ்வாறு குப்பைக் கூளங்களாகவும், பௌதீகக் குறைபாட்டுடனும் காணப்பட்டால் எவ்வாறுதான் கல்வியைக் காப்பாற்றி ஒழுக முடியும். எனவே, கல்வியோடு சமூக சிந்தனையுள்ள பொதுமக்கள் தங்களின் ஒற்றுமையை நிலைநாட்டி நமது பாடசாலை, நமது கல்வி, நமது பிள்ளைகள், நமதூர் என்கிற சிந்தனை வேரூண்ட வேண்டி நிலைக்குள் தள்ளப்பட்டு பிரதேச வாதத்தை உடைந்தெரிந்து கல்வியில் அபிவிருத்திகாண அனைவரும் ஒன்றுபடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.





0 comments:

Post a Comment