Wednesday, December 21, 2011

தனியார் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு எதிரான பேரணிக்கு நீதிமன்றம் தடை


தனியார் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு எதிராக கண்டியில் இருந்து கொழும்பு வரை நேற்று நடத்தப்பட இருந்த பாத யாத்திரைக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. பேராதனைப் பொலிஸார் முன்வைத்த மனுவை ஆராய்ந்த கண்டி நீதிமன்றம் இந்த தடை உத்தரவை வழங்கியது. தனியார் பல்கலைக்கழகம் ஆரம்பித்தல் உட்பட பல விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேராதனை பல்கலைக்கழக மாணவர் சங்கம் இந்த பாத யாத்திரையை ஏற்பாடு செய்திருந்தது.

பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அருகில் இருந்து கொழும்புவரை பாத யாத்திரை நடத்துவதால் கொழும்பு, கண்டி வீதியில் வாகனப் போக்குவரத்து பெரும் பாதிப்பு ஏற்படும் என பொலிஸார் தரப்பில் நீதிமன்றத்திற்கு சுட்டிக்காட்டப்பட்டது. இதனைக் கருத்திற்கொண்டே கண்டி நீதவான் நீதிமன்றம் குறித்த பாத யாத்திரைக்கு தடை உத்தரவு விதித்தது.

இதேவேளை பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் ஈடுபடுவதற் காக கண்டியில் திரண்டிருந்தனர். இதன் காரணமாக கண்டி - கம்பளை வீதி, கண்டி - கலகா வீதி என்பவற் றில் நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்கள் மற்றும் வாக னம் பயணிக்க முடியாதநிலை ஏற்பட்டது.

நேற்றுக் காலை பேராதனை பல்கலைக் கழகத்திலிருந்து கொழும்பு நோக்கி மாணவர்கள் ஊர்வலமாக செல்ல முற்படுவதை அறிந்த பொலிசார் காலை 6 மணி முதல் கலகம் அடக்கும் ஏற்பாடுகளுடன் வீதிகளில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந் தனர். இந்நிலையில் மாணவர்கள் கண்டி நோக்கி ஊர்வலமாக செல்வதற்கு திட்டமிட்டு ஊர்வலத்தை ஆரம்பித்தனர். எனினும் 500 க்கு மேற்பட்ட பொலிசார் வீதிகளை தடை செய்து நிறுத்தப்பட்டிருந்தனர்.

இதன் காரணமாக பல்கலைக்கழக ஊழியர்களும், பொதுமக்களும் கண்டி நகர் வருவதற்கோ, நகரிலிருந்து வெளியேறுவதற்கோ முடியாத நிலை ஏற்பட்டது. கலகா செல்லும் வாகனங்கள், தங்கொல்லை வழியாக செல்ல முற்பட்டதால் அவ்வீதியிலும் வாகன நெரிசல் ஏற்பட்டது. அதேபோல் கம்பளை செல்வோர் கடுகண்ணாவை வழியாக செல்ல முயன்றதால் அங்கும் நெரிசல் ஏற்பட்டது.

இதன் காரணமாக பேராதனையில் தொடர்ந்தும் பதற்ற நிலையே காணப்படுகிறது. இதேவேளை யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட லலித்குமார், மற்றும் குகன் ஆகியோரை விடுதலை செய்யக் கோரி மாணவர்களால் பேராதனை பல்கலைக்கழக மெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதேபோல் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்ட பேராதனை மாணவர்கள் இருவரையும் விடுவிக்க கோரியும் மாணவர்கள் பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

இது இவ்வாறிருக்க பேராதனை பல்கலைக்கழக மாணவர் சங்கங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளமையால் பல்கலைக்கழகத்தில் மேலும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் அத்து மீறி செயல்படுவதானால் பேராதனையிலிருந்து கொழும்புக்கு ஊர்வலமாக செல்வதை காரணம் காட்டியே இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

இதில் பேராதனை பல்கலைக்கழக மாணவர் சங்கம் மற்றும் பீடங்களின் மாணவர் சங்கங்கள் தடைசெய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. பேராதனை பல்கலைக்கழகத்தின் அனைத்து மாணவ சங்கங்களையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக நேற்று முதல் இடைநிறுத்தியுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உப பீடாதிபதி பேராசிரியர் எஸ். பீ. எஸ். அபேகோன் அறிவித்துள்ளார்.

பல்கலைக்கழகத்தின் ஆலோசனை மற்றும் நிருவாகக் குழுக்கள் ஒன்றிணைந்த கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் நற் பெயருக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையிலும் ஏனைய மாணவர்களுக்கு பல்வேறு வகையில் இடைஞ்சல்களை ஏற்படுத்தும் வகையிலும் மாணவ சங்கங்கள் தொழிற்பட்டு வருகின்றமையையடுத்தே இக்குழுவினர் மேற்படி தீர்மானத்தை எடுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment