Sunday, December 11, 2011

சனத் ஜயசூரிய தலைமையிலான பாராளுமன்ற அணி வெற்றி


பாராளுமன்ற உறுப்பினர்கள் அணிக்கும் அமைச்சர்கள் அணிக்கும் இடையிலான சபாநாயகர் கிண்ண 20-20 மென்பந்து கிரிக்கெட் போட்டியில் சனத் ஜயசூரிய தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் அணி 71 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது. 

அமைச்சர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அணிக்கு ஜனாதிபதியே தலைவராக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டபோதும் ஜனாதிபதி வராதமையால் அணித்தலைவராக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கடமையாற்றினார். நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அணிக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சனத் ஜயசூரிய தலைமை தாங்கினார்.

கொழும்பு டொரிங்டன் விளையாட்டு அமைச்சு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் அணித் தலைவர் சுசில் பிரேமஜயந்த முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தார். இதேவேளை அமைச்சர்கள் அணிக்கு பதில் தலைவரான டலஸ் அழகபெரும அணியை தலைமை தாங்கி நடத்தினார்.


முதலில் துடுப்பெடுத்தாடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி 19 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களை பெற்றது. மழை பெய்தமையால் 19 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது. 177 எனும் வெற்றி இலக்கை அடைய பதில் துடுப்பெடுத்தாடிய அமைச்சர்கள் அணி 19 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 105 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற தோல்வியை தழுவியது.

ஆட்ட நாயகனாக அமைச்சர் டலஸ் அழகப்பெருமவும் சிறந்த பந்து வீச்சாளராக ஹர்ஷ டி சில்வாவும் தெரிவானார்கள். 

0 comments:

Post a Comment