
யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது அதிகாரத்தை துஷ்பிரயோகப்படுத்தி சட்டத்தை மீறியதான சம்பவங்கள் இடம்பெற்றமைக்கு சாட்சிகள் இருக்கும் பட்சத்தில் அவை குறித்து நன்கு விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
அத்துடன், பொதுமக்களை இலக்கு வைத்து பாதுகாப்பு தரப்பினரால் தாக்குதல்கள் எவையும் நடத்தப்படவில்லை என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், இது தொடர்பான உண்மைத் தகவல்களைத் திரட்டி குற்றமிழைக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு சட்டமா அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களின் இன விகிதாசாரத்தை மாற்றுவதற்கு அரசாங்கம் முனைவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு அர்த்தமற்றது என்றும் இலங்கையில் எந்தவொரு இடத்திலும் காணியினை கொள்வனவு செய்யும் உரிமை அனைத்து இலங்கைப் பிரஜைகளுக்கும் உண்டு என்பது அடிப்படை உரிமையாகும் என அரசாங்கம் நன்கு உணர்ந்துள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்ற தெரிவுக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என்றும் அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தின் போது நியாயமான கோரிக்கைகளை உள்வாங்கி அவற்றை நிறைவேற்றுவதற்கான பேச்சுவார்த்தைகளை தமிழ் அரசியல் தலைமைகளுடன் அரசாங்கம் ஆரம்பித்துள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
சுயநலப் போக்குகளுக்காக நடத்தப்படும் அரசியல் நடவடிக்கைகளை விடுத்து தேசிய பிரச்சினைகளின் போது பொது உடன்பாட்டுடன் தீர்மானம் எடுக்க அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும் என்ற ஆணைக்குழுவின் பரிந்துரையை அரசாங்கம் முழு மனதாக ஏற்றுக்கொள்வதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், சட்டவிரோதமான முறையில் ஆயுதங்கள் வைத்திருப்பதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாகக் காணப்பட்டது என்றும் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment