
இலங்கையின் இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வு காணுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கப் பிரதிநிதிகளும், இரா சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளும் பலசுற்றுப் பேச்சுவார்த்தைகளை இதுவரை நடத்திவிட்டனர்.
இப்பேச்சுவார்த்தை குறித்த விடயங்கள் வெளியே தெரிவிக்கப்படாத போதிலும் மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பில் அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடு தோன்றியிருப்பதாக இரா சம்பந்தன் அறிவித்தள்ளார்.
இருதரப்பாருக்கும் இடையே தோன்றியுள்ள கருத்து வேறுபாட்டுக்கு காரணமான அந்த மூன்று முக்கிய விவகாரம் குறித்தும், அதனோடு இணைந்த விடயங்கள் குறித்தும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
அரசாங்கத்திற்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் முறிவடைந்துவிடுமோ என்ற அச்சம் நிலவியதொரு நிலையில் இருதரப்பாரும் கடந்த செவ்வாய்கிழமை சந்தித்துக்கொண்டனர்.
சந்திப்பின் பின்னர் கருத்துரைத்த இரா சம்பந்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாஙகத்தரப்பு தனது கருத்து வேறுபாட்டை தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு இணைப்பு, பொலிஸ் அதிகாரம் மற்றும் காணி அதிகாரம் ஆகிய மூன்று விடயங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கருத்துடன் தாம் மாறுபடுவதாக அரசாங்கத்தரப்பில் கூறப்பட்டது. இருந்தபோதும் அடுத்த சுற்றுப்பேச்சுவார்த்தை எதிர்வரும் 14 ஆம் திகதி செவ்வாய்கிழமை நடைபெறுமெனவும் சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இனநெருக்கடிக்கு தீர்வு தொடர்பில் இலங்கை அரசியல் வரலாற்றில் நடைபெற்ற அநேக பேச்சுக்களின் சாரம்சத்தை நாம் நோக்குவோமாயின் அங்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரத்தை தமிழர் தரப்பு கோருவதும் அதற்கு மறுப்புத் தெரிவிப்பதை தென்னிலங்கை சிங்கள அரசாங்கங்கள் வாடிக்கையாகிக் கொண்டிருப்பதையும் நோக்கலாம்.
விடுதலைப் புலிகள் தரப்பு பலமாக இருந்தபோதும்கூட தென்னிலங்கை அரசாங்கங்கள் காணி மற்றும் பொலிஸ் அதிகாரத்தை தமிழருக்கு வழங்க அஞ்சின. இவ்வதிகாரங்களை வழங்குவதன் மூலம் நாடு பிளவுபட்டுவிடுமென்பது அவர்களின் வாதமாக இருந்தது.
இவ்வாறானதொரு நிலையில் புலிகள் ஆயுத ரீதியாக அழிக்கப்பட்டு, தமிழர் தரப்பு பாராளுமன்ற பலத்தை மாத்திரம் நம்பியிருக்கும் தற்போதைய நிலையிலும் தென்னிலங்கை அரசாங்கங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேண்டிநிற்கும் அதிகாரங்களை கையளித்துவிடுமா என்பது மிகப்பெரும் சந்தேகமே.
அத்துடன் தற்போதைய மஹிந்த ராஜபக்ஸ தலைமியிலான தென்னிலங்கை அரசாங்கமானது சிங்கள் மக்களின் குறிப்பிடத்தக்க ஆதரவை பெற்றிருப்பதுடன், பாராளுமன்றத்திலும் பெரும்பான்மைப் பலத்தையும் கொண்டுள்ளது. இவ்வாறானதொரு நிலையில் காணி அதிகாரத்தையும், பொலிஸ் அதிகாரத்தையும் தமிழர் தரப்புக்கு வழங்கி அரசாங்கமானது தமது செல்வாக்கை குறைத்து விடுமெனவும் எதிர்பார்க்கமுடியாது.
மஹிந்த ராஜபக்ஸவும், அவரது குடம்பத்தினரும், அவரது சகோரதர்களும் இலங்கையில் தொடர்ந்து ராஜபக்ஸக்களின் ஆட்சியே தொடரவேண்டுமென விரும்புகின்றனர். தமிழருக்கு அதிகாரத்தை பகிரவேண்டியேற்படின் தமது குடும்ப நலனுக்கு அது பாதகமாக அமைந்துவிடுமென்பதையும் அவர்கள் உணர்ந்துள்ளனர். எனவே தனிப்பட்டவகையில் ராஜபக்ஸ சகோதரர்களும் தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்வதில் விருப்பமற்றே காணப்படுவர்.
மேலும் வடக்கும், கிழக்கும் இணைக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையிலும் சிக்கல் காணப்படுகிறது எனலாம். அதாவது வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்திருக்க வேண்டுமா அல்லது பிரிந்திருக்க வேண்டுமா என்பது பற்றி கிழக்கு மக்களே தீர்மானிக்க வேண்டுமென இலங்கை - இந்தியா ஒப்பந்தம் அதாவது அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் கூறுகிறது.
இருந்தபோதும் உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி தற்போது அந்த மாகாணங்கள் பிரிந்தே உள்ளன. இவ்வாறானதொரு சூழ்நிலையில் அரசாங்கம் உயர்நீதிமன்றத் தீர்ப்பை புறக்கணித்து வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பதிலும் சந்தேகம் உள்ளது.
இதனுடன் மற்றுமொரு விடயமும் உள்ளது. அதாவது இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது வடக்கு, கிழக்கில் தமிழர்கள் மிகப் பெரும்பான்மையாக இருந்தனர். இருந்தபோதும் தற்போது அந்நிலை மாறிவிட்டது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம், சிங்கள சமூகங்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.
நாட்டில் சனத்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுமாயின் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள்தான் பெரும்பான்மையினராக உள்ளனர் என்பதை அறிந்துகொள்ள முடியுமென முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார். இதனடிப்படையில் கிழக்கில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழுவதால் வடக்குடன் கிழக்கு இணைவதற்கு முஸ்லிம்களின் விருப்பததையும் பெறவேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
அந்தவகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் முன்வைத்துள்ள வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பு, பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வட, கிழக்கு மாகாணங்களுக்கு வழங்கும் கோரிக்கைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கமானது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளும் வாய்ப்புகளில் வரட்சித் தன்மையே காணப்படுகிறது எனலாம்.
அதேநேரம் தமிழர் தரப்பில் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தாம் முன்வைத்துள்ள அந்த மூன்று முக்கிய கோரிக்கைகளை விட்டுக்கொடுப்பார்களென எதிர்பார்க்கமுடியாது.
கடந்த பல வருடங்களாக அகிம்சை போராட்டத்திலும், ஆயுதப் போராட்டத்திலும் தமிழர் தரப்பு பஙகேற்றமைக்கு காரணம் தென்னிலங்கை சிங்கள அரசாங்கங்களிடம் குவிந்திருக்கும் அதிகாரங்கள் தமக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென்பதற்கேயாகும். இதற்காக அவர்கள் பல ஆயிரம் உயிரிழப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வடக்கு, கிழக்கு மாகாணத்திற்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் கிடைக்காமல் ஏனைய எந்தவொரு தீர்வையும் ஏற்றுக்கொள்வார்களென நிச்சயமாக எதிர்பார்க்கமுடியாது. புலம்பெயர்ந்துள்ள தமிழர் தரப்பும் இதனை ஏற்றுக்கொள்ளவார்களென நம்பமுடியாது.
கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல, இனநெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் அரசாங்கம் நிராகரித்த மூன்று கோரிக்கைகளையும் ஒதுக்கிவிட்டு பேச்சுவார்த்தையை தொடரலாமெனவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகள் பிரச்சினையானவை என்றும், அந்த கோரிக்கைகளைதவிர பல பிரச்சினைகள் தமிழருக்கு உண்டு எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதியின் வெளிவிவகார ஆலோசகரும், அரசாங்க தரப்பு பேச்சுவார்த்தை குழுவின் செயலாளருமான சஜின்வாஸ் குணவர்த்தன ஊடகமொன்றுக்கு தற்போதைய பேச்சுவார்த்தை நிலவரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
தற்பேதைய பேச்சுக்களை சீர்குலைக்கும் செய்பாடுகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இறஙகியுள்ளதாகவும், சகலரும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் திர்வை எட்டுவதற்கு இலங்கை அரசாங்கம் இடையூறை ஏற்படுத்துவதாக இரா சம்பந்தன் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு எந்த அடிப்படையற்றதெனவும் தெரிவித்துள்ளாh.
ஏனைய சமூகங்களுடன் ஒரு தீர்வை எட்டுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமை உண்மையான முயற்சியில் இறஙகவேண்டுமென்றும், தற்பேதைய அமைதி நிலையானது புலிகள் அழித்ததன் மூலமே ஏற்பட்டதெனவும், இனிமேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு புலிகளை சார்ந்திருக்க முடியாதெனவும், போரில் வெற்றியை அரசாங்கம் பெற்றுள்ள போதும் அரசியல் தீர்வு ளவசயனெ நம்புவதாலேயே அதனை எட்டுவதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவை அரசாங்கம் நியமித்துள்ளதாகவும் சஜின்வாஸ் குணவர்த்தனா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் வாதம் இவ்வாறானதாக இருக்கையில் சர்வதேச சமூகமானது அரசாங்கம் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கிடையே அதிகாரப் பகிர்வு தொடர்pல் நீடிக்கும் முரண்பாட்டுக்கு எத்தகைய அழுத்தங்களை அல்லது உதவிகளை வழங்கப்போகிறது எனவும் நாம் நோக்கவேண்டும்.
இந்தியா மற்றும் மேற்குலகின் விருப்பம் அதிகாரத்தை பரவலாக்க வேண்டுமென்பதாகவே உள்ளது. அது எவ்வாறு அமையவேண்டும், மத்திய அரசிடம் அல்லது மாகாண அரசிடம் எத்தகைய அதிகாரங்கள் இருக்கவேண்டும் போன்ற விடயங்கள் எல்லாம் சம்பந்தப்பட்ட இருதரப்பினருமே பேசித்தீர்க்க வேண்டுமென்பதுதான் அவர்களின் விருப்பம்.
ஆனால் இருதரப்பாரும் இதுவரை எந்த இணக்கத்திற்கு வராமையும், இலங்கை அரசாங்கம் அதிகாரப் பகிர்வை மேற்கொள்ள வேண்டுமாயின் அதற்கு சர்வதேச சமூகத்தின் அழுத்தம் இருக்கவேண்டுமெனவும் தமிழர் தரப்பு விரும்புகிறதொரு கட்டத்தில் இந்தியா மற்றும் மேற்குலகின் வகிபாகமும் இங்கு முக்கியமாகிறது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஏற்கனவே பல நாடுகளுக்கு விஜயங்களை மேற்கொண்டு தமது மக்களுக்குரிய அரசியல் தீர்வை இலங்கை அரசாங்கம் முன்வைப்பதற்கான அழுத்தங்களை பிரயோகிக்குமாறு கோரிக்கையும் விடுத்திருந்து.
இந்தவேளையில்தான் அரசியல் தீர்வை முன்வைப்பதில் மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் கைக்கொள்ளும் மெத்தனப்போக்கை இந்தியாவைச் சேர்ந்த அசோக் கே. மேத்தா கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றுக்கு அவர் எழுதியுள்ள கட்டுரையொன்றில், புலிகள் தற்போது இல்லை. யுத்தத்தில் அரசாங்கம் வென்றுவிட்டது. ஆனால் தனது நாட்டின் சிறுபான்மை மக்களுக்கு அரசியல் அதிகாரப் பகிர்வை இதுவரை உறுதிப்படுத்தவில்லை. இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வுக் கோரிக்கையை இந்திய மத்திய அரசு கைவிட்டால் அதனை மன்னிக்க முடியாது என்பதே தமது நிலைப்பாடெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா உள்ளிட்ட மேற்குலக சமூகம் இலங்கையில் அதிகாரப் பரவலாக்கத்தை விரும்புகிற போதிலும் அந்த அதிகாரப் பகிர்வு எப்படி அமைய வேண்டுமென இலங்கையிடம் கூறுவதற்கு அவை தடுமாற்றத்தை எதிர்கொள்கிறது. இறைமை கொண்ட ஒரு நாடு இறைமை கொண்ட இலங்கையிடம் காணி, பொலிஸ் அதிகாரத்தை வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வழங்கி, அந்த மாகாணங்களை இணைத்துவிடுங்கள் என்று கூறுமா என்பதையும் நாம் சிந்திக்கவேண்டும்.
சாரம்சமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேட்பதை அரசாங்கம் கொடுக்கப்போவதும் இல்லை. அவ்வாறே அரசாங்கம் கொடுக்கப்போவதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாங்கிக்கொள்ளப் போவதுமில்லை. ஆகமொத்தத்தில் இலங்கை அதிசயத்தை வேண்டி நிற்கிறது. ஆம் அப்போதுதான் அதிகாரப் பகிர்வும் சாத்தியமெனலாம்.
0 comments:
Post a Comment