இன்று அசுரவேகத்தில் எதனையும் செய்ய வேண்டியுள்ளது. கால்கடுக்க நின்று வேலை செய்த யுகம் இல்லாமல் போய் அனைத்தும் கணனி யுகத்தில் மக்களும், அவர்களுடைய வேலைகளும் ஒரு கணப்பொழுதில் முடிய வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் எவ்வித தவறுமில்லை. ஆனால், இன்று தென்கிழக்குப் பிரதேசத்திலுள்ள ஒரு மக்கள் வங்கி கிளையில் நமது அன்பரொருவருக்கு ஏற்பட்ட நிலைமையைப் பார்க்கின்றபோது இதற்குத்தானா? மக்கள் தனியார் வங்கிகளை நாடுகின்றனர் என்பதை உணர்ந்து கொண்டாராம். விடயம் என்னவென்று பார்ப்போம்.
தன்னால் வைக்கப்பட்ட அடகு நகையை பெற்றுக்கொள்ளவேண்டி வங்கிக்குச் சென்றுள்ளார். உள்ளே சென்றதும் ஈட்டுக்கான துண்டை கொடுத்து அதற்கான மொத்தப் பணத்தொகையை கேட்டுள்ளார். ஊழியரும் கட்டவேண்டிய பணத்தொகையை கணனியில் பார்த்துவிட்டு அதற்கான துண்டுகளை உரியவரிடம் ஒப்படைக்கின்றார். பின்னர் பணத்தைக் கொடுக்கும் கவுண்டரிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவர் பணத்தைப் பெற்று அதற்கான ரசீதை அன்பரிடம் கொடுக்கின்றார்.
அவர் அதனை மீண்டும் முன்னால் உள்ள ஊழியரிடம் சென்று ஏற்கனவே கொடுத்த ஈட்டுக்கான ரசீதை சரி, பிழை பார்த்து வாடிக்கையாளரிடம் கொடுபடுகிறது. அதன்பின்னர் அரை மணித்தியாலயம் கதிரையில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கின்றார். அதன்பின்னர் ஈட்டைப் பெற்றுக் கொள்ளும் அறையினுள் சென்றால் அங்கே இருக்கின்ற வங்கி ஊழியர்கள் இருவர் தங்களது பலதரப்பட்ட பிரச்சினைகளை கலந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். இடையிடையே ஈடு (அடகு) வைக்க வருகின்றவர்களையும், ஈட்டை பெற்றுக் கொள்ள வருகின்றவர்களையும் பார்த்து சிரித்துவிட்டு தங்களுடைய வேலைகளையும் செய்து கொண்டு பேச்சினையும் தொடர்கின்றனர்.
இத்தனைக்கும் சுமார் 1 மணித்தியாலயத்திற்கும் மேல் செலவழிக்கப்படுகிறது. அடகுவைத்த நகையை பெற்றுக் கொள்வதற்காக இவ்வளவு நேரத்தை செலவழிப்பதென்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் கஷ்டமான ஒரு செயற்பாடாகவே தென்படுகிறது. அது மட்டுமல்ல வங்கியிலுள்ள அனைத்து வேலைகளையும் அடகு வைப்பவரே செய்ய வேண்டியும் உள்ளது. வங்கயில் பல ஊழியர்கள் இருந்தும் இத்தனை வேலைகளைச் செய்தும் ஒரு மணி நேரம் செல்கிறது என்றால் பொதுமக்கள் தனியார் வங்கிகளுக்குச் செல்வதில் என்னதான் தப்பிருக்கிறது.
இதே விடயத்தை ஒரு தனியார் வங்கியில் என்றால் அந்த இடத்திலேயே பணத்தைக் கட்டிவிட்டு அந்த இடத்திலேயே நகையையும் பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. ஐந்து, பத்து நிமிடங்களில் செய்து முடிக்க வேண்டிய வேலையை இந்த அரச வங்கியில் மணித்தியாலயக் கணக்கில் செலவழிக்கப்படுகிறது.
எனவேதான், மக்கள் தனியார் வங்கிகளை நாடுகின்றனர் என்பது நிரூபணமாகின்றது. "மக்கள் மனமறிந்த வங்கி" என்கிற மக்கள் வங்கி மக்களின் நிலைமையை புரிந்து செயற்பட வேண்டும். இப்பிரதேசத்திலுள்ள சில வங்கிக் கிளைகளில் பகற்பொழுதில் ஒரு வேலையை முடிப்பதற்காக வந்தால் உரிய ஆசனத்தில் அதிகாரிகள் இருக்க மாட்டார்கள். அரச சேவையாளர்கள் தங்களது காரியாயலத்திலிருந்து குறுகியகால லீவில் வந்து ஒரு வேலையை முடிப்பது என்பது கஷ்டமான காரியமாகும்.
வங்கி அதிகாரிகள் வாடிக்கையாளர்களின் நிலைமை, காலத்திற்கேற்ற முறையில் நவீனத்துவம், அவசரமான செயற்பாடுகள், மக்களின் வேலைப்பளு போன்றவைகளையும் கவனத்திற் கொண்டு மக்களின் மனதைப்புரிந்து கொண்டு செயற்படுகின்றபோது மக்கள் தனியார் வங்கிகளை நாடமாட்டார்கள். இன்று அதிகமான தனியார் வங்கிகள் தங்களுடைய கிளைகளை பட்டிதொட்டி எங்கும் திறக்கின்றனர். காரணம் இதனால்தானோ என எண்ணத் தோன்றுகின்றது. என்று தனக்கு நேர்ந்த கதியை விபரித்தார் அன்பர்.

0 comments:
Post a Comment