
சர்வதேச சிரேஷ்ட தின விழாவை முன்னிட்டு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களம் சிரேஷ்ட பிரஜைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடத்திய கலாசார விழா 2011 கவிதைப் போட்டியில் கலாபூசணம் ஆசுகவி அன்புடீன் முதலாம் பரிசைப் பெற்றுள்ளார்.
கிழக்கு மாகாணம் அம்பாரை மாவட்டம் அட்டாளைச்சேனைப் பிரதேசம் பாலமுனை கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவரது இயற்பெயர் கலந்தர் லெப்பை.
இலங்கை வை.எம்.எம்.ஏ. அகில இலங்கை ரீதியில் நடத்திய கவிதைப் போட்டியில் முதலாம் பரிசு (1982), சர்வதேச கூட்டுறவு தின விழா கவிதைப் போட்டியில் முதலாம் பரிசு (1983), அம்பாரை மாவட்ட இலக்கிய விழா நாடக எழுத்து பிரதிப் போட்டியில் இரண்டாம் பரிசு (1980), சம்மாந்துறை மக்கள் கலை வட்டம் நடத்திய மே தின கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசு (1981), பேராதனைப் பல்கலைக் கழகம் நடத்திய சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு(1998), இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் தினக்குரல் பத்திரிகையுடன் இனைந்து நடத்திய புலவர்மணி ஆ.மு.சரிபுத்தின் நூற்றாண்டு ஞாபகார்த்த சர்வதேச மரபுக் கவிதைப் போட்டியில் சிறப்புப் பரிசு (2009) இப்படி பல்வேறு போட்டிகளிலும் பரிசும் பாராட்டும் பத்திரமும் பெற்ற இக்கவிஞர், உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மகாநாடு(2002 இல்) கவிரங்கில் பங்கு கொண்டு கவிதை பாடியது மட்டுமல்லாது, அம்மகாநாட்டில் சிரேஷ்ட கவிஞர்கள் வரிசையில் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டவர் ஆவார்.
அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணிகளின் அம்பாரை மாவட்ட தலைவராகவும், தென்கிழக்கு கலாசார பேரவை செயலாளராகவும், எழுவான் பத்திரிகை வெளீட்டக தவிசாளராகவும், அட்டாளைச்சேனை பிரதேச செயலக கலாசார பேரவை உப தலைவராகவும், அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளராகவும், அட்டாளைச்சேனை மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினராகவும், யங் லயன்ஸ் விளையாட்டுக் கழக ஆலோசகராகவும் ஆற்றிவரும் இவர் சமூக, சமய, கலாசார பணிகளிலும் ஈடுபடுகிறார்.
முகங்கள், ஐந்து தூண்கள், சாமரையில் மொழி கலந்து, மரணமல்ல ஜனனம் முதலான கவிதைத் தொகுதிகளை வெளியீடு செய்துள்ள இவரது நெருப்பு வாசல் (சிறுகதை) சிலந்தி தைத்த ஆடை (கட்டுரை) தொகுதிகள் இம்மாத இறுதியில் வெளிவரவுள்ளன.
36 வருடங்கள் தபால் திணைக்களத்தில் கடமை புரிந்து 2011 ஆகஸ்டில் ஓய்வு பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை துருவம் இணையத்தளமும் வாழ்த்துகிறது.
0 comments:
Post a Comment