Wednesday, December 14, 2011

யுத்தம் நிறைவடைந்தும் சவளக்கடை காணிகள் மீள ஒப்படைக்கப்படவில்லை


(ஏ.ஜே.எம்.ஹனீபா) 
யுத்தம் நிறைவடைந்து இரண்டு வருடம் பூர்த்தியடைந்த நிலையிலும் சவளக்கடை பொலிஸ் நிலையம் அமைந்துள்ள தனியார் காணிகளை அக்காணிச் சொந்தக்காரர்களுக்கு மீள ஒப்படைக்கவில்லை என அப்பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

1990ஆம் ஆண்டு இம் மாவட்டத்தில் நிலவிய பயங்கரவாத சூழ்நிலையை அடுத்து அக்காணியில் இரானுவ முகாம் அமைப்பதற்காக பெற்றுக் கொள்ளப்பட்டது அதனைத் தொடர்ந்து 1993ஆம் ஆண்டு இரானுவத்தினர் வெளியேறியதை அடுத்து இப்பிரதேச மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பொலிஸ் நிலையம் அமைப்பதற்காக பெற்றுக்கொண்ட காணிகள் இதுவரைக்கும் அம்மக்களிடம் ஒப்படைக்கப்பட வில்லை இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் நூற்றுக்கு மேற்பட்ட பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தொழில் முயற்சிகளை மேற்கொள்ள இடமின்றி கஷ்டத்தை அனுபவித்து வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு பாதுகாப்பு நிலையங்களுக்காக ஏனைய பிரதேசங்களிலிருந்து  பெற்றுக் கொள்ளப்பட்ட காணிகள் அனைத்தும் நாட்டின் சமாதான சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அதே சமயம் சவளக்கடை பொலிஸ் நிலையம்  அமைந்துள்ள காணிகளை மாத்திரம் இன்னும் அக்காணிச் சொந்தக்காரர்களுக்கு மீள ஒப்படைக்கப்படாமை வேதனைக்குரிய விடயமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

சவளக்கடை பொலிஸ் நிலையம் அமைப்பதற்காக பிரத்தியோகமாக காணிகள் ஒதுக்கியுள்ள போதும் அங்கு சென்று பொலிஸ் நிலையத்தை அமைக்காமல் 22 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் இன்னும் பொது மக்களுடைய காணிகளை சுவிகரித்துக் கொண்டிருப்பது இம்மக்களை வேண்டுமென்றே வதைப்பதற்கு சமமாகும் எனவும் தங்களது மனக் கிளேசத்தை வெளிக்காட்டுகின்றனர்.

இக்காணிகளை மீளப் பெற்றுக் கொள்ளும் விடயமாக இப்பிரதேசத்தின் பிரதேச செயலாளர், உள்ளூர் அரசியல் தலைமைகள், பொலிஸ் உயரதிகாரிகள் போன்றோருக்கு தெரியப்படுத்தியும் இதுகால வரைக்கும் தீர்வுகள் எதுவும் கிடைக்க வில்லை எனத் தெரிவிக்கும் அதே சமயம் எங்களுக்கு இந்த இணையத்தள செய்திச் சேவை மூலம் தீர்வுகள் கிடைக்க பிராத்திக்கின்றோம்.

0 comments:

Post a Comment