Thursday, December 15, 2011

மொபிடெலின் பிரதம நிறைவேற்று அதிகாரி


இலங்கையின் தேசிய கையடக்கத் தொலைபேசி சேவை வழங்குனரான ஸ்ரீலங்கா ரெலிக்கொம் மொபிடெல், லலித் டீ சில்வாவை நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக மீண்டும் நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கையின் தொலைத் தொடர்பாடல் துறைக்கு புதியவரல்லாத திரு. டீ சில்வா, 2002ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தினால் மொபிடெல் கையகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அதன் முதலாவது பிரதம நிறைவேற்று அதிகாரியாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.

அத்துடன் மொபிடெல் நிறுவனத்தின் விரைவான தொழில்நுட்ப மற்றும் சந்தை வளர்ச்சிக்கு தேவையான அடித்தளத்தை இடுவதிலும் இவர் மிக முக்கிய பங்களிப்பினை வழங்கியிருந்தார். சர்வதேச தகவல் கணணி தொழில்நுட்ப மற்றும் செயற்றிட்ட முகாமைத்துவ நிபுணராக முன்னேறியுள்ள திரு. டீ.சில்வா, ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தில் சிரேஷ்ட ஆலோசகராகவும், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவன பணிப்பாளர் சபை உறுப்பினராகவும், சவூதி ரெலிகொம் நிறுவனத்தின் சிரேஷ்ட ஆலோசகர் ஆகிய பதிவிகளை வகித்ததன் ஊடாகப் பெற்றுக் கொண்ட பெருமளவு அனுபவங்களை தன்னுடன் கொண்டு வருகின்றார். 

அதிக எண்ணிக்கையான விருதுகள் மற்றும் உயர்ந்தளவான வளர்ச்சி என்பவற்றினால் மெருகூட்டப்பட்ட ஒரு வெற்றிகரமான வருடத்தினை மொபிடெல் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், இவரது நியமனமானது மொபிடெலின் வரலாற்றில் மட்டுமன்றி இலங்கை வரலாற்றிலும்கூட முக்கியமான ஒரு தறுவாயில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

தகவல் தொடர்புமிக்கதும் அறிவு வளம் பொருந்தியதுமான ஒரு சமூகத்தை நோக்கி இலங்கையை வழிநடாத்திச் செல்லுதல் என்ற தொலைத்தொடர்பாடல் சேவை வழங்குனரான மொபிடெல் நிறுவனத்தின் தூரநோக்கிற்கு, அந்நிறுவனம் சரியான நேரத்தில் இலங்கையில் அறிமுகப்படுத்தி வருகின்ற நவீன கையடக்கத் தொலைபேசி தொழில்நுட்பங்கள் சிறந்த அத்தாட்சிகளாகும். ஆசியாவிலேயே முதலாவது Super 3.5G HSPA வலையமைப்பினை மொபிடெல் அங்குரார்ப்பணம் செய்ததுடன், இலங்கையில் முதன் முதலாவதாக HSPA + MIMO மற்றும் 4G / LTE தொழில்நுட்பங்களை வெற்றிகரமாக செயற்படுத்திக் காண்பித்துள்ளது.

நாட்டின் அபிவிருத்திக்காக, ஈடு இணையற்ற தொலைத் தொடர்பாடல் தீர்வுகளை உருவாக்குவதிலும் புதிய தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்துவதிலும் தொடர்ந்தும் முனைப்புடன் செயற்பட்டு வரும் மொபிடெல் நிறுவனமானது, தகவல் கணணி தொழில்நுட்பத்தை (ICT) அனைவரும் பெற்றுக்கொள்ளக் கூடியதாகவும் அதேநேரம் கட்டுப்படியானதாகவும் மாற்றியமைப்பதில் பாரிய அடிகளை எடுத்து வைத்துள்ளது. திரு. டீ சில்வா போன்ற திறமையுள்ள ICT நிபுணர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை, நாட்டின் தகவல் கணணி தொழில்நுட்பம் சார் இலக்குகளுடன் ஒருங்கிசைந்து செல்லும் வகையிலமைந்த மொபிடெலின் தூரநோக்கினை மேலும் பலப்படுத்துவதாக அமைந்துள்ளது.

இந்த நியமனம் தொடர்பாக ஸ்ரீலங்கா ரெலிக்கொம் மற்றும் மொபிடெல் தலைவரான திரு. நிமால் வெல்கம கருத்துத் தெரிவிக்கையில், 'உயர் செயற்பாட்டையுடைய குழு உருவாக்க திறமைகளை தன்னகத்தே கொண்டுள்ள ஒரு உத்வேகம் மிக்க தலைவராக நிரூபிக்கப்பட்டுள்ள நிபுணரான லலித் எம்முடன் இணைந்து கொள்கின்றமையால், முன் னோக்கிய சிந்தனையுடைய, பலம்பொருந்திய மற்றும் மிகவும் அர்ப்பணிப்புள்ள மொபிடெல் குழுவினருக்கு மேலும் ஒத்துழைப்புக்களை வழங்க முடியுமாக இருக்கும் என்பதிலும், இலங்கையின் கையடக்கத் தொலைபேசி சார் ஐஊவு வரைபடத்தில் இன்னும் உயர்ந்த மட்டங்களை நோக்கி மொபிடெல் வர்த்தக குறியீட்டினை வழிநடாத்திச் செல்லக்கூடியதாக இருக்கும் என்பதிலும் நான் மிகவும் நம்பிக்கை கொண்டுள்ளேன்' என்று கூறினார். 

திரு. டீ சில்வா தனது நியமனம் மற்றும் எதிர்பார்ப்புகள் தொடர்பாக கருத்துக் கூறுகையில், 'பல வருடங்களுக்குப் பின்னர் இலங்கைக்கு திரும்பியுள்ள இவ்வேளையில் உட்கட்டமைப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி போன்றவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கண்டு மாத்திரமன்றி, இந்நாட்டின் மக்கள் மற்றும் அவர்களது சமூக, ஆன்மீக விடயங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைப் பார்த்தும் நான் மகிழ்ச்சி அடைந்தவனாக உள்ளேன். நாம் இப்போது உறுதியானதும் தூரநோக்கினை கொண்டதுமான தலைமைத்துவத்தின் கீழ், சுதந்திரமானதும் ஐக்கியப்பட்டதுமான ஒரு நாட்டில் இருக்கின்றோம்.

இத்தொழில் துறையினை நோக்குகையில், 20 வீதத்திற்கும் குறைவாக இருந்த எமது கையடக்கத் தொலைபேசி பரம்பலானது ஆறு வருடங்கள் என்ற குறுகிய காலப்பகுதிக்குள் 90 வீதத்திற்கும் அதிகமானதாக இப்போது அதிகரித்துள்ளது. இணையத்தளப் பாவனையும் பத்து மடங்கினால் உயர்வடைந்துள்ளது. இது நிச்சயமாக நாட்டுக்கு சிறப்பானதொரு தருணமாகும். மீண்டும் ஒரு தடவை மொபிடெல் குழுவினரை தலைமை தாங்கிச் செல்வதற்கும் எமது நாடு மேலும் அபிவிருத்தி அடைவதற்கான பங்களிப்பினை வழங்கும் விடயத்தில் உதவுவதற்கும் எனக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பினையிட்டு, நான் கௌரவமும் மகிழ்ச்சியும் அடைகின்றேன்' என்றார். 

ஸ்ரீலங்கா ரெலிக்கொம் மொபிடெல் பற்றி:
தேசிய கையடக்கத் தொலைபேசி சேவை வழங்குனரும் இலங்கை கிரிக்கெட் அணியின் உத்தியோகப+ர்வ அனுசரணையாளருமான ஸ்ரீலங்கா ரெலிக்கொம் மொபிடெல், ஸ்ரீலங்கா ரெலிக்கொமிற்கு முற்றிலும் சொந்தமான ஒரு துணை நிறுவனமாகும். இந்நிறுவனம் EDGE / GPRS செயற்படு திறனைக் கொண்டதும் இரட்டைப் பட்டை (Dual band) இனை செயற்படுத்த வடிவமைக்கப்பட்ட அனைத்து அம்சங்களையும் கொண்டதுமான 2.5 GSM  வலையமைப்பினை 2004ஆம் ஆண்டு அங்குரார்ப்பணம் செய்து வைத்தது.

2007 டிசம்பரில், தென்னாசியாவிலேயே முதலாவது Super 3.5G வலையமைப்பான 3.5G HSPA வலையமைப்பினை கம்பனி அங்குரார்ப்பணம் செய்தது. மேலும், HSPA + MIMO தொழில் நுட்பத்தை 28.8 Mbps கீழிணைப்பு (Down link) வேகத்துடன் செயற்படுத்தி காண்பித்துள்ளது. அத்துடன் தென்னாசியப் பிராந்தியத்திலேயே முதன்முறையாக 96 Mbps இற்கும் அதிகமான கீழிணைப்பு (Down link) வேகத்துடன் 4G / LTE தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக பரீட்சித்துள்ளது. 2.5G / 3.5 G/ 4G  வலையமைப்புக்கள் மற்றும் சேவைகளுக்காக இன்று வரை 400 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான முதலீட்டினை மொபிடெல் மேற்கொண்டுள்ளது. இலங்கையிலுள்ள எந்தவொரு வலையமைப்பில் இருந்தும் 1717 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துவதன் ஊடாக மொபிடெலின் வாடிக்கையாளர் சேவையை பெற்றுக்கொள்ள முடியும். மேலதிக விபரங்களுக்கு www.mobitel.lk  என்ற இணையத்தளத்தினை பார்வையிடுங்கள். 

0 comments:

Post a Comment