
மரக்கறி மற்றும் பழ வகைகளை பிளாஸ்டிக் கூடைகளில் ஏற்றிச் செல்லும் நடவடிக்கை ஒரு மாதத்திற்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இக்காலப் பகுதிக்குள் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மேற்படி புதிய முறைமைக்கு தம்மை தயார்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மரக்கறி வகைகள் மற்றும் பழ வகைகளை பிளாஸ்டிக் கூடைகளில் எடுத்துச் செல்வது தொடர்பில் அரசாங்கத்தினால் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறையானது உடனடியாக அமுல்படுத்தப்பட்டமையால் மேற்படி இருதரப்பினரும் சிரமத்துக்குள்ளாயினர். இதனையடுத்து நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இந்த நடைமுறைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதுடன் பதற்றங்களும் நிலவின.
பாராளுமன்றத்திலும் இது தொடர்பில் கேள்விகள் எழுந்தன. அத்துடன் இந்தப் புதிய முறையை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் கால அவகாசம் வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையிலேயே நுகர்வோர் விவகார அமைச்சு, வர்த்தக சங்க பிரதிநிதிகள் தரப்பு ஆகியன நேற்று புதன்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து புதிய நடைமுறை மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமைகள் தொடர்பிலும் பேச்சுக்கள் நடத்தின. இதன் பின்னர் மேற்படி புதிய நடைமுறையை ஒரு மாதத்திற்கு இடை நிறுத்துவதென தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment