இலங்கையில் இணையத்தளங்கள் மீது விதிக்கப்பட்ட சட்ட வலுவற்ற தடைகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு, எதிர்வரும் ஜனவரி 24ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படும் என உயர் நீதிமன்றம் இன்று அறிவித்தது.
சுதந்திய ஊடக இயக்கம் சார்பில் அதன் ஏற்பாட்டாளராலும் நிறைவேற்றுக்குழு அங்கத்தவர் ஒருவராலும் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் ஊடகம் மற்றும் தகவல் தொடர்பில் அதிகாரமுள்ள 5 அதிகாரிகளும் தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவும் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், கடந்த நவம்பர் 5ஆம் திகதி, ஓர் ஊடக அறிக்கையை வெளியிட்டதன் மூலம் இலங்கை பற்றிய செய்திகளை வெளியிடும் இணையத்தளங்கள் அனைத்தும், ஊடகங்கள்- தகவல் தொடர்பாடல் அமைச்சில் பதிவு செய்யப்பட வேண்டும் என அறிவித்ததாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்பின் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கடந்த நவம்பர் 16ஆம் திகதி செய்தி வெளியிடும் ஆறு இணையத்தளங்களை முடக்கியது எனவும் - இணையத்தளங்களை தடை செய்வதற்கென அரசாங்கம் ஊடக ஒழுக்கநெறி வழிகாட்டல் எதையும் வெளியிடாமலே இந்த தடையை மேற்கொண்டது எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேற்படி இணையத்தளங்கள் தடை செய்யப்பட்டதால் மனுதாரர்களின் சிந்தனை, மனசாட்சி, சுதந்திரங்கள் மீறப்பட்டதாகவும் பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் என்பன மறுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கும்படி இந்த மனு நீதிமன்றத்திடம் வேண்டியுள்ளது.
இணையத்தளங்கள் மீது விதிக்கப்பட்ட தடையை அல்லது கட்டுப்பாட்டை பிரதிவாதிகள் நீக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment