
இலங்கை சீன நட்புறவின் சின்னமாக கொழும்பில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நெலும் பொக்குன (தாமரைத் தடாகம்) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேசிய கலைகள் ஆற்றுகை அரங்கம் 15ஆம் திகதி வியாழக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது.
சீன-இலங்கை நட்புறவின் ஞாபகார்த்தமாக 300 கோடி ரூபா செலவில் இது அமைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இக்கலையரங்கத்தை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைப்பதுடன் அன்றைய தினம் காலை கொழும்பு ஹோர்டன் பிளேஸ் பொதுநூலக வீதிக்கு ‘நெலும் பொக்குன (தாமரைத் தடாக) வீதி' எனவும் பெயரிடப்படவுள்ளது.
இந்த நிகழ்வுகளில் சீனப் பிரதி பிரதமர் உட்பட சர்வதேச ராஜதந்திரிகள் அமைச்சர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொள்வதுடன் வீதி பெயரிடும் வைபவம் மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க மாநகர மேயர் ஏ.ஜே. முஸம்மில் ஆகியோரின் தலைமையில் நடைபெறவுள்ளது.
இலங்கையின் வரலாற்றில் நாட்டின் சுதந்திரத்துக்குப் பின் சகல வசதிகளுடன் இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது சர்வதேச கலாசார நிலையமாக இக்கலையரங்கை குறிப்பிட முடியும். 1911ஆம் ஆண்டு டிசம்பரில் டவர் மண்டபம் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் சரியாக 100 வருடங்களின் பின் இக்கலையரங்கம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

கலையரங்கம் தொடர்பான இணையத்தளத்தின் (www.lotuspond.lk) அங்குரார்ப்பண வைபவம் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது.
0 comments:
Post a Comment