(பி.எம்.எம்.ஏ. காதர்)
சுனாமி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மருதமுனை மக்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை தீர்வுகளை பெற்றுக்கொடுக்காது மௌனம் காக்கிறது என அக்கட்சியின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர். அமீர் விடுத்துள்ள ஊடக நேற்று புதன்கிழமை அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; சுனாமி அனர்த்தம் இடம்பெற்று கடந்த 7 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளன. இம்மக்களின் வேதனைகள் குறித்து சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளோ அல்லது அதிகாரிகளோ கண்டுகொள்ளாதுள்ளமையை நான் கண்டிக்கின்றேன். மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டதன் நோக்கம். முஸ்லிம் சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றுவதேயாகும்.
இதற்காக தலைவர் அஷ்ரப் 1994ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிகா குமாரத்துங்கவின் அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை இணைத்து, சமூகத்திற்காக பெரும் அபிவிருத்திகளையும் நலன்களையும் சாதுரியமாக நிறைவேற்றினார்.
இன்றைய நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசின் பங்காளியாக இருக்கின்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் கூட்டு சேர்ந்ததன் நோக்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மாகாண சபை உறுப்பினர்களையும் பாதுகாத்து கொள்வதற்காகவே தவிர மக்களுக்கு நன்மைகள் கிடைப்பதற்காக அல்ல.
சுனாமி அனர்த்தத்தில்; அதிகளவான உயிர்களையும் உடைமைகளையும் இழந்து அழிவுகளை சந்தித்துள்ள அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் குறிப்பாக கல்முனை தொகுதி மக்களின் வேதனைகளை கருத்திற் கொண்டு அரசுடன் பேசி மக்களுக்கு நன்மைகளை பெற்றுத்தராமல், வெறுமனே வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்து ஊடகங்களில் பிரபல்யத்தை பெறுவதால் எமது மக்கள் அடைந்த நன்மைகள் எதுவுமில்லை.
எனவே மக்களின் நலன் கருதி கிழக்கு மாகாணத்திலுள்ள ஏனைய முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் தங்களது பிரதேச மக்களுக்கு செய்து வருகின்ற நன்மைகளில் குறிப்பிட்டளவையாவது சுனாமியினால் பாதிக்கப்பட்ட மருதமுனையிலுள்ள குடும்பங்களுக்கு முடியுமான உதவிகளையும் பெற்றுத்தருமாறு பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கின்றேன்.

0 comments:
Post a Comment