Sunday, January 01, 2012

டீசல் புகையினால் மாரடைப்பு ஏற்படுகிறது


(எஸ்.எல்.மன்சூர்) 
ஸ்கொட்லாந்து நாட்டின் தலைநகரான எடின்பர்கில் அமைந்துள்ள எடின்பர்க்க பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உலகளவில் மாசடைந்து காணப்படும் பல நகரங்களில் பல்தரப்பட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். அப்போது அந்நகரங்களில் அதிகளவு காற்று மாசுபடுவதற்குக் காரணமாக அமைவது டீசல் மூலம் உருவாகும் புகைதான் என்பதை இந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். இந்த டீசல் புகையில் உள்ள நுண் துகள்கள் இதயத்தினது திசுக்கள் மற்றும் இரத்த நாளங்களை எளிதாக சிதைக்கக்கூடியதாகக் காணப்படுகின்றனவாம்.

இதன்காரணமாக நரம்புகள் பாதிப்பு, இரத்தம் உறைதல், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பல நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அத்துடன் இதய நோய் உள்ளவர்கள் டீசல் வாகனங்கள் அதிகமாக நடமாடும் வீதிகளில் அதிக நேரம் செலவழிக்க வேண்டாம் எனவும் அதிகமதிகம் வாகனங்கள் செல்லும் வீதிகளின் அருகாமையில் குடியிருக்க வேண்டாம் எனவும் பிரிட்டிஸ் ஹார்ட் பவுண்டேசன் துணைத் தலைவர் ஜெர்மி பியர்சன் ஆலோசனை வழங்கியுள்ளார். இவர்கள் தங்களது ஆராய்ச்சியின் மூலம் டீசல் புகை மாசு என்பதன் மூலம் அதிகமான மக்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு காரணமாக அமைகின்றது என்பதையும் கண்டறிந்துள்ளனர். 

இன்று எமது நாட்டைப் பொறுத்தளவில் கொழும்பு உட்பட பலநகரங்கள் புகையினால் நிரம்பி வழிகின்ற ஒரு நிலையும் காணப்படுகின்றது. குறிப்பாக அரச போக்குவரத்துக்குச் சொந்தமான பல பஸ்வண்டிகள் இந்நிலைக்குள்ளாகி வீதியில் பயணிப்போரையும் திக்குமுக்காட வைக்கும் அளவுக்கு புகை வெளியிடப்படுகின்றன. வாகனங்களின் புகை அளவை அளவிடும் முறைகள் பல பிரதேசங்களிலும் காணப்படுகின்றன. அங்கு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. ஆனால் வீதியில் புகை நிறைந்த பல டீசல் வாகனங்கள் உலாவருகின்றன. இது சுற்றுப்புறச் சூழலையும் பாதிக்க வைத்து மனிதர்களுக்கு மாரடைப்பு போன்ற பல நோய்த்தாக்கங்களையும் அல்லவா ஏற்படுத்திவிடுகின்றன. இந்நிலை மாற்றம் பெற உரிய அதிகாரிகள் முன்வரவேண்டும். பொதுவாக டீசல் புகையினால் மாசுபடும் நிலையைக் குறைக்க வேண்டுமானால் பழுதடைந்த வாகனங்களை சாலைகளில் செலுத்தவே கூடாது. பழைய வாகனங்களை வீதியில் செலுத்துவதற்கு அனுமதி வழங்காது அவற்றை அப்புறப்படுத்துவதற்கான சிபார்சுகளை செய்வதன் மூலம் இந்நிலையைக் கட்டுப்பாட்டுக்;குள் கொண்டுவரலாம்.

மேலும் அதிக பாரத்தை சுமந்து செல்லும் ட்ரக்டர்கள் மற்றும் ட்ரைலர்கள், நீண்ட தூரம் செல்லும் லொறிகள், குப்பை வண்டிகள், பேருந்து வாகனங்கள், மின்சார ஜெனரேட்டர்கள், போக்லைன்கள், கடல்வழி ஊர்திகள் போன்ற வாகனங்களில் இணைந்து பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். எனவே, இதில் பணியாற்றுபவர்கள் தங்களுடைய தேகராக்கியத்தை பாதுகாக்கும் பொறுட்டு அதற்கேற்றவாறான ஆடைகள் மற்றும் முக மூடிகளை அணிந்து கருமமாற்றுவது சிறப்பானதாக அமையும். 

0 comments:

Post a Comment